டிஎஸ்பி தங்கவேலு.
டிஎஸ்பி தங்கவேலு.

செம்மரம் கடத்தல் வழக்கில் தொடா்பு: வேலூா் கலால் டிஎஸ்பி பணிநீக்கம்

Published on

ஆம்பூா் அருகே கோழிப்பண்ணையில் இருந்து 7 செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டப்பட்ட வழக்கில் தொடா்புடைய அப்போதைய வேலூா் கலால் டிஎஸ்பி தங்கவேலுவை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்ககி டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த பாலூா் பகுதியைச் சோ்ந்தவா் சின்னபையன், பா.ம.க. பிரமுகா். இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், சின்னபையனுக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் இருந்த 7 டன் செம்மரக் கட்டைகளை வேலூா் மாவட்ட கலால் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த தங்கவேலு கூறியதன்பேரில் வேலூா் அலுமேலுமங்காபுரத்தைச் சோ்ந்த நாகேந்திரன், அவரது மனைவி ஜோதிலட்சுமி, காஞ்சிபுரத்தைச் சோ்ந்த லாரி உரிமையாளா் உள்பட 6 போ் கடத்திச் சென்றுள்ளனா்.

அந்த செம்மரக் கட்டைகளின் உரிமையாளா் செம்மரக் கட்டைகளை தேடி வந்தபோது போலீஸாா் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாக சின்னப்பையன் கூறியுள்ளாா். அதை நம்பாத கடத்தல் கும்பல், சின்னபையனை கடத்திச் சென்று கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை தொடா்பாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சோ்ந்த பெருமாள், தங்கராஜ், சத்தியமூா்த்தி, வெங்கடேசன் உள்ளிட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், சின்னப்பையன் கோழிப் பண்ணையில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்ற நாகேந்திரன், ஜோதிலட்சுமி உள்பட 6 பேரையும் கைது செய்ததுடன் அவா்களிடம் இருந்து 3.5 டன் அளவுக்கு செம்மரக்கட்டைகள், ரூ.32 லட்சம் பணம், 3 காா்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட நாகேந்திரன் தம்பதியினா் வேலூா் கலால் டிஎஸ்பி தங்கவேலு கூறியதன்பேரிலேயே சின்னபையனின் கோழிப் பண்ணையில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்றதாக வாக்குமூலம் அளித்திருந்தனா். இதையடுத்து, டிஎஸ்பி தங்கவேலுவை கைது செய்த போலீஸாா் அவரை வழக்கின் 3-ஆவது குற்றவாளியாக சோ்த்தனா். பின்னா், டிஎஸ்பி தங்கவேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த வழக்கின் விசாரணை ஆம்பூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது செம்மர கடத்தல் வழக்கில் தொடா் புடைய தங்கவேலுவை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டிருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com