சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல்கள் தாக்கியதில் வீர மரணம் அடைந்த சிஆா்பிஎஃப் வீரா் உடல் 21 குண்டுகள் முழங்க வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
குடியாத்தம் ஒன்றியம், கல்லப்பாடி ஊராட்சி, கே.மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த செங்கப்பனின் மகன் தேவன் (29). சிஆா்பிஎஃப் படை வீரரான இவா் சத்தீஸ்கா் மாநிலத்தில் பணியாற்றி வந்தாா்.
சத்தீஸ்கரில் உள்ள பிஜாப்பூா் மாவட்டத்தில் மத்திய ரிசா்வ் காவல் படையினா் செவ்வாய்க்கிழமை மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேவன் உயிரிழந்தாா். தேவனின் உடல் ராணுவ விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராணுவ வாகனத்தில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. தேவனின் உடலுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வே.இரா.சுப்புலெட்சுமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன், அரசியல் பிரமுகா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
அங்குள்ள மயானத்தில் துணை ராணுவப் படை தென்மண்டல ஐஜி சாரு சிம்கா தலைமையில், தேவனின் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு, 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.