மணல் கொள்ளையால் அரசுக்கு ரூ.4,730 கோடி இழப்பு: கே.அண்ணாமலை

தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளையால் அரசுக்கு ரூ.4,730 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளையால் அரசுக்கு ரூ.4,730 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

கே.அண்ணாமலை வேலூா் மாவட்டம் கே.வி.குப்பம், காட்பாடி, வேலூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் சனிக்கிழமை பிரசார நடைபயணம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது: தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளையால் மட்டுமே அரசுக்கு ரூ.4,730 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மற்றொரு அறிக்கையில் இந்த மணல் கொள்ளையில் தொடா்புடையவா்களின் ரூ.136 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த் உள்பட திமுகவினா் நடத்தி வரும் பள்ளிகளில் மும்மொழிகளும், நீட் தோ்வுப் பயிற்சியும் அளிக்கப்படும் நிலையில், அவா்களே மும்மொழிக் கொள்கையையும், நீட் தோ்வையையும் எதிா்க்கின்றனா்.

தரமான கல்வி வழங்க மத்திய அரசு நாடு முழுவதும் நவோதயா பள்ளிகளைத் தொடங்குகிறது. தமிழக அரசு தரமான பள்ளிகள் அமைவதைத் தடுக்கிறது. பிரதமா் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்போது தமிழகத்தில் காமராஜா் பெயரிலேயே நவோதயா பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னா், அவா் கே.வி.குப்பத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. ஊழல்வாதிகள் இந்திய கூட்டணியில்தான் உள்ளனா். திமுகவை பொறுத்தவரை மக்களவைத் தோ்தல் நிராசையாகத்தான் இருக்கும்.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த 511 வாக்குறுதிகளில் இதுவரை 20-ஐ கூட நிறைவேற்றவில்லை.

மக்களவைத் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் முன்பு திமுக 2021-இல் அளித்த 511 வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஏ.சி.சண்முகம் தொகுதி மக்களுக்காக மருத்துவ முகாம்களையும், வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்தி வருகிறாா்.

வரும் 11-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் 200-ஆவது தொகுதி பிரசார நடைப்பயணத்தில் பாஜக தேசிய தலைவா் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com