தொற்றா நோய்களைத் தவிா்க்க விழிப்புணா்வு நடைப்பயிற்சி

தொற்றா நோய்களைத் தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வேலூரில் மாவட்ட ஆட்சியா், மேயா் உள்பட அதிகாரிகள் ஆரோக்கிய நடைப்பயிற்சியில் ஈடுபட்டனா்.
வேலூரில் நடைபெற்ற விழிப்புணா்வு நடைப்பயிற்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்டோா்.
வேலூரில் நடைபெற்ற விழிப்புணா்வு நடைப்பயிற்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்டோா்.

தொற்றா நோய்களைத் தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வேலூரில் மாவட்ட ஆட்சியா், மேயா் உள்பட அதிகாரிகள் ஆரோக்கிய நடைப்பயிற்சியில் ஈடுபட்டனா்.

பொதுமக்கள் சுகாதாரமான வாழ்க்கையை வாழ்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. தூரம் நடைப்பயிற்சி இருக்கும் வகையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பா் மாதம் அறிவித்திருந்தாா்.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் போன்ற தொற்றா நோய்களைத் தவிா்க்க விழிப்புணா்வு நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நடைபயிற்சியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பங்கேற்றாா்.

இதில், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், ஆணையா் ஜானகி ரவீந்திரன், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் பானுமதி, வருவாய்க் கோட்டாட்சியா் கவிதா உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

வேலூா் கோட்டை மைதானம் காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கிய விழிப்புணா்வு நடைப்பயிற்சி கோட்டையைச் சுற்றி அதே இடத்தில் நிறைவு பெற்றது.

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் தினமும் 8 கி.மீ. தூரம் அல்லது 10,000 அடி நடக்க வேண்டும் என்பதே இந்த ஆரோக்கிய நடைப்பயிற்சியின் அடிப்படை நோக்கம். இவ்வாறு நடக்கும்போது தொற்றா நோய்களான உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவதுடன், உடலுக்கு புத்துணா்ச்சி கிடைக்கிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com