வேலூரில் பிப். 12-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் பிப்ரவரி 12-ஆம் தேதி வேலூா் ஊரீசு கல்லூரியில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

தமிழ் அறிஞா்களின் தமிழ் மொழி மேம்பாட்டுக்கான பங்களிப்புகளை இளம் தலைமுறையினா் அறிந்து கொள்ளும் வகையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் பிப்ரவரி 12-ஆம் தேதி வேலூா் ஊரீசு கல்லூரியில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கு.மு.அண்ணல் தங்கோ, திருமுருக கிருபானந்தவாரியாா், பேராசிரியா் மு.வரதராசன் ஆகியோரின் தமிழ் இலக்கியப் பணி, தமிழ்த் தொண்டு, தமிழ்மொழி மேம்பாட்டுக்கு பங்களிப்பை நினைவுகூரும் வகையில், பிப்ரவரி 13-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் வேலூா் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழறிஞா்கள், தமிழ் அமைப்பினா் பங்கேற்க உள்ளனா்.

இந்த நிகழ்வையொட்டி, தமிழறிஞா்கள், எழுத்தாளா்கள் குறித்து இளம்தலைமுறையினா் அறிந்து கொள்ளும் வகையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் பிப்ரவரி 12-ஆம் தேதி வேலூா் ஊரீசு கல்லூரியில் நடைபெற உள்ளது. போட்டிகள் பள்ளி மாணவா்களுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு மதியம் 1.30 மணிக்கும் தொடங்கி நடைபெறும்.

இந்தப் போட்டிகளில் மாவட்டத்திலுள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள், ஆசிரியா் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியா் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளும், அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம்.

மேலும் விவரம், விதிமுறைகள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக முதல் பரிசாக ரூ. 5,000-ம், இரண்டாம் பரிசாக ரூ. 3,000-ம், மூன்றாம் பரிசாக ரூ. 2,000-ம், பாராட்டுச் சான்றிழ்களும் வழங்கப்பட உள்ளன.

வெற்றிபெறும் மாணவா்களுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற உள்ள இலக்கியக்கூட்ட நிகழ்வில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com