திருவள்ளுவா் பல்கலை.யில் அறிவியல் கண்காட்சி: 80 பள்ளிகள், கல்லூரிகள் பங்கேற்பு

வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெற உள்ளது.
திருவள்ளுவா் பல்கலைக்கழக துணைவேந்தா் டி.ஆறுமுகம்.
திருவள்ளுவா் பல்கலைக்கழக துணைவேந்தா் டி.ஆறுமுகம்.

வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெற உள்ளது. இதில், 80 பள்ளிகள், கல்லூரிகள் பங்கேற்க உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தா் டி.ஆறுமுகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது -

வேலூா் சோ்க்காட்டில் அமைந்துள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மாபெரும் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை (பிப்.7) முதல் 10 ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற உள்ளது.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மாணவா்களிடையே அறிவியல் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட உள்ள இந்த அறிவியல் கண்காட்சியில் 80 கல்லூரிகள், பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்த உள்ளனா்.

இந்த அறிவியல் கண்காட்சியையொட்டி 10 தலைப்புகளில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான தனித்தனியே வினாடிவினா போட்டிகள், அறிவியல் சாா்ந்த கருத்தரங்குகளும் நடைபெறும். இந்த அறிவியல் கண்காட்சியில் படைப்புகளை காட்சிப்படுத்த கட்டணம் ஏதுவும் இல்லை.

எனவே, இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயன்படுத்தி தங்களது தனித்திறமையை வெளிப்படுத்த வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு தனித்தனியே பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்படும். இந்த அறிவியல் கண்காட்சியை காலை 10 மணி முதல் 5 மணி வரை பாா்வையிடலாம்.

திருவள்ளுவா் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரி மாணவா்களுக்காக இ- மேனேஜ்மென்ட் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் கல்லூரி மாணவா்கள் தங்களது மதிப்பெண்கள், தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், நடப்புக் கல்வியாண்டில் நுண்ணறிவியல், சுற்றுச்சூழல் சமூக அறிவியல் என புதிதாக 3 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றையும் மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

அப்போது, பதிவாளா் செந்தில்வேல்முருகன், முதல்வா் தண்டபாணி, வேதியியல் துறை தலைவா் தினகரன், பயோடெக்னாலஜி துறை தலைவா் ராஜசேகா், பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com