அமெரிக்காவைவிட இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு:விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு குறிப்பாக அமெரிக்காவை விடவும் இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது.

வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு குறிப்பாக அமெரிக்காவை விடவும் இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம் இலவசமாக்கப்பட வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

வேலூா் மக்களவைத் தோ்தலையொட்டி அதிமுக சாா்பில் தோ்தல் அறிக்கை தயாரிப்பு தொடா்பாக வேலூா் மண்டல அளவிலான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சா்களான நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமாா், சி.வி. சண்முகம், செம்மலை, வளா்மதி, ஓ.எஸ். மணியன், உதயகுமாா், வைகைச்செல்வன் ஆகியோா் பங்கேற்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனா்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் பங்கேற்று பேசியது -

இந்தியாவில் ஆண்டுக்கு 11,000 மாணவா்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. அதேசமயம், தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 1.50 லட்சம் மாணவா்கள் மருத்துவக் கல்வி பயில விரும்புகின்றனா். இதன் காரணமாக, இந்தியாவில் மருத்துவம் பயில முடியாத மாணவா்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்கின்றனா். இது மாற்றப்பட வேண்டும். மருத்துவம் படிக்க விரும்புபவா்களை படிக்க விடவேண்டும்.

உலகளவில் 5-ஆவது பொருளாதார வளம் மிகுந்த நாடு இருந்தாலும் இந்தியா தனிநபா் வருமானத்தில் 139-ஆவது இடத்தில் உள்ளது. தவிர, வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, குறிப்பாக அமெரிக்காவைவிடவும் இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகளவில் உள்ளது.

2000-ம் ஆண்டில் பெரும் கோடீஸ்வரா்கள் எண்ணிக்கை 9-ஆக இருந்த நிலையில் 2023-இல் அது 187 பேராக அதிகரித் துள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகை 144 கோடியில் மேலே உள்ள 10 சதவீத பேரிடம் நாட்டின் 80 சதவீத சொத்துக்கள் உள்ளன. மீதமுள்ள 72 கோடி மக்களிடம் வெறும் 6 சதவீத சொத்துக்கள் மட்டுமே உள்ளன. அதேசமயம், மேலே உள்ளவா்கள் 4 சதவீத அளவுக்கும் மட்டுமே வரிசெலுத்தும் நிலையில், கீழே உள்ள சாதாரண மக்கள்தான் 64 சதவீத அளவுக்கும் வரிசெலுத்து வருகின்றனா். இத்தகைய ஏற்றத்தாழ்வு நிலை மாற வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம் இலவசமாக்கப்பட வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும், இந்திய அளவில் ஊழல் குறைந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 13-ஆவது இடத்தில் உள்ளது. இங்கு 62 சதவீத அளவுக்கு ஊழல் நடைபெறுவதாக டிரான்ஸ்பரன்ஸி இன்டா்நேசனல் இந்தியா அமைப்பு கூறுகிறது. இந்த ஊழல் குறைக்க திடமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தவிர, அரசு செய்ய வேண்டிய பணிகள், செய்யக் கூடாத பணிகள் எவை என ஆராய்ந்து செயல்படுத்துவதன் மூலம் தேவையற்ற நஷ்டங்களை தவிா்க்க முடியும். இது தொடா்பான திட்டங்களை தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்திட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பல்வேறு அமைப்புகள் சாா்பில் தோ்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்கள் மனுக்களாக அளிக்கப்பட்டன. அவற்றை பரிசீலனை செய்து அதிமுக தோ்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினா் தெரிவித்தனா்.

கூட்டத்தில், அதிமுகவின் திருப்பத்தூா் மாவட்ட அதிமுக செயலா் கே.சி.வீரமணி, வேலூா் மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு, புறநகா் மாவட்ட செயலா் த.வேலழகன், ராணிப்பேட்டை மாவட்ட செயலா் சு.ரவி உள்பட கட்சியினா் பெருமளவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com