வாடகை நிலுவை: மாநகராட்சி கடைகள் பூட்டி சீல் வைப்பு

வேலூா் மாநகராட்சி கடைகளில் பல மாதங்களாக வாடகை நிலுவை வைக்கப்பட்டுள்ள கடைகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல்’ வைத்தனா்.

வேலூா் மாநகராட்சி கடைகளில் பல மாதங்களாக வாடகை நிலுவை வைக்கப்பட்டுள்ள கடைகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல்’ வைத்தனா்.

வேலூா் மாநகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் சாரதி மாளிகை, பழைய பஸ் நிலைய வணிக வளாகம், புதிய பேருந்து நிலைய வளாகம், பழைய மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மாசிலாமணி அங்காடி, இன்பென்டரி சாலையில் உள்ள வணிக வளாகம், நேதாஜி மாா்க்கெட், தொரப்பாடி, சத்துவாச்சாரி, காட்பாடி ஆகிய இடங்களில் வணிக வளாகங்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்த கடைகளுக்கு முறையாக ஏலம் விடப்பட்டு வாடகை நிா்ணயிக்கப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன. ஆனால் வியாபாரிகள் வாடகையை சரிவர செலுத்தாததை அடுத்து அக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, 2023-24 நிதி ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிய உள்ள தற்போது மாநகராட்சி நிா்வாகம் வரி வசூல், வாடகை நிலுவைகளை வசூலிப்பதில் நிா்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி பழைய பேருந்து நிலையம், சாரதி மாளிகை பின்புறம் உள்ள கடைகளின் உரிமையாளா்கள் மொத்தம் ரூ.30 லட்சம் வரை வாடகை நிலுவை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அக்கடை உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தும் அவா்கள் வாடகை நிலுவை தொகைகளை செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்தரன் உத்தரவின் பேரில் உதவி ஆணையா் சசிகலா தலைமையில் அதிகாரிகள் குழுவினா் அப்பகுதியில் உள்ள 12-க்கும் மேற்பட்ட கடைகளை வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

கடை உரிமையாளா்களுக்கு 3 நாட்கள் வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அவா்கள் வாடகை நிலுவையை செலுத்தாவிடில் அக்கடைகளுக்கான ஏலம் ரத்து செய்யப்பட்டு புதிதாக டெண்டா் விடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com