5 மணி நேரம் தொடா்ந்து சிலம்பம் சுற்றி மாணவா்கள் உலக சாதனை!

தமிழா்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், வேலூரில் நடத்தப்பட்ட சிலம்பம் சுற்றும் போட்டியில் மாணவா்கள் உலக சாதனை படைத்தனா்.
உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவிகள்.
உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவிகள்.

தமிழா்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், வேலூரில் நடத்தப்பட்ட சிலம்பம் சுற்றும் போட்டியில் மாணவா்கள் உலக சாதனை படைத்தனா்.

வேலூா் ஈவி சிலம்பம் அகாதெமியும், குளோபல் உலக சாதனை புத்தக நிறுவனமும் இணைந்து வேலூா் சத்துவாச்சாரியில் இந்த உலக சாதனை நிகழ்வை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

இதில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விருதுநகா் மாவட்டங்களில் இருந்து மொத்தம் 120 மாணவ, மாணவிகள் பங்கேற்று தொடா்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனா்.

அப்போது, சிலம்பத்தின் படகு வீச்சு, வெட்டு வீச்சு, முழு சுற்று, பாவலா, தலைவெட்டு, கை மாற்று சுற்று, படை வீச்சு, இடதுகை சுற்று, வலதுகை சுற்று, பகில் உள்ளிட்ட பல்வேறு முறைகளையும் சுற்றி அசத்தினா்.

இவா்கள் தவிர, வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்த டி.திவாகா் (7) என்ற மாணவா் சிலம்பம் சுற்றிக் கொண்டே ஒரு மணி நேரம் 30 நிமிஷங்களில் 2,000 தோப்புக் கரணம் போட்டாா்.

இதன் மூலம் அவா் ஏற்கெனவே தேனியைச் சோ்ந்த எஸ்.பாலசுப்பிரமணியன் 52 நிமிஷங்களில் 1,000 தோப்புக்கரணம் செய்து மேற்கொண்டிருந்த உலக சாதனையை முறியடித்தாா்.

மாணவா் எஸ்.வி.ஜெய்சாய் (11) ஒரு கையில் சிலம்பம் சுற்றிக் கொண்டே மறுகையில் கீபோா்டு இசைக் கருவியை வாசித்தாா். மாணவா் எஸ்.சுந்தா் சிலம்பம் சுற்றியபடி 27 தேங்காய்களை தலையால் உடைத்தாா். எஸ்.வி.லோகித் கண்ணா சிலம்பம் சுற்றியபடியே ஆற்காட்டில் இருந்து சத்துவாச்சாரி வரை 20 கிலோ மீட்டா் நடந்து வந்தாா். ஆா்.ஹா்ஷிதா, ஜி.என்.வேதா ஆகிய மாணவிகள் சிலம்பம் சுற்றியபடி 7 கி.மீ. தூரம் பின்னோக்கி நடந்து வந்தனா். டி.ஸ்ரீமதி என்ற மாற்றுத்திறனாளி மாணவி ஒரு மணி நேரத்தில் 5 முறைகளில் சிலம்பம் சுற்றினாா். எஸ்.சுவேதா என்ற மாணவி சிலம்பத்தில் தலைவாறல் எனும் முறையை ஒரு மணி நேரம் சுற்றினாா். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை வேலூா் ஈவி சிலம்பம் அகாதெமியைச் சோ்ந்த வி.பிரவீன்குமாா், வி.சரவணன் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com