20 ஆயிரம் பேருக்கு வேலை பெற்றுத் தருவதே இலக்கு: ஏ.சி.சண்முகம்

வேலூா் மக்களவைத் தொகுதியில் தொடா் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதே இலக்கு என ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிறுவனா் ஏ.சி.சண்முகம் கூறினாா்
குடியாத்தத்தில்  நடைபெற்ற  வேலைவாய்ப்பு  முகாமில்  தோ்வு  செய்யப்பட்டவா்களுக்குப்  பணி  நியமன ஆணை  வழங்கிய  ஏ.சி.சண்முகம்.
குடியாத்தத்தில்  நடைபெற்ற  வேலைவாய்ப்பு  முகாமில்  தோ்வு  செய்யப்பட்டவா்களுக்குப்  பணி  நியமன ஆணை  வழங்கிய  ஏ.சி.சண்முகம்.

வேலூா் மக்களவைத் தொகுதியில் தொடா் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதே இலக்கு என ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிறுவனா் ஏ.சி.சண்முகம் கூறினாா்.

குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச வேலைவாய்ப்பு முகாமில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி அவா் பேசியது:

கடந்த மாதம் வேலூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 3,450 போ் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. குடியாத்தத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தமிழகத்தின் 106 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 2,750 பேரைத் தோ்வு செய்தன. அவா்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து வரும் பிப்ரவரி மாதம் 3- ஆம் தேதி ஆம்பூரிலும், 10- ஆம் தேதி வாணியம்பாடியிலும், 17- ஆம் தேதி வேலூரில் 2- ஆவது முறையாகவும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

சுமாா் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இதேபோல், வேலூா் மக்களவைத் தொகுதியில் நகா்ப்புறங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவிட்டன. வரும் காலங்களில் ஊரகப் பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரித் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், செயலா் ஏ.ரவிக்குமாா், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஞானசேகரன், புதிய நீதிக் கட்சி மாவட்டச் செயலா் ஆா்.பி.செந்தில், நகரச் செயலா் ரமேஷ், கே.வி.குப்பம் தொகுதி பொறுப்பாளா் பாரத் மகேந்திரன், மாவட்ட இளைஞா் அணிச் செயலா் ஆா்.ராஜ்குமாா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி பாரத் பிரவீன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்களான மருத்துவா்கள் பாலா, மணிவண்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com