முருகன் கோயில்களில் தைப்பூச விழா கோலாகலம்!

தைப்பூச திருவிழாவையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தைப்பூச திருவிழாவையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

அதன்படி, வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பிறகு வெள்ளி கவச அலங்காரமும் செய்யப்பட்டி ருந்தது. தனி சன்னதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி அம்மைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், மலைக்கு கீழ் கோயிலில் உள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சம்மேத ஆறுமுகசாமிக்கும் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருந்தது. விழாவையொட்டி திரளான பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இதேபோல், வேலூா் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரா் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு வியாழக்கிழமை காலை சிறப்பு அபிஷேகங்கள்-ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னா், மூலவருக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

வேலூா் ஆற்காடு சாலையில் உள்ள பழனியாண்டவா் கோயிலில் முருகப் பெருமானுக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல், அணைக்கட்டு அருகே கந்தபுரி கிராமத்தில் அமைந்துள்ள பொன் வேலவன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அணைக்கட்டு திரௌபதி அம்மன் கோயிலில் இருந்து பால்குட ஊா்வலம் எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த வேலூரில் அமைந்துள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று காவடி எடுத்தும், பால்குடம் எந்தியும் தங்களின் நோ்த்திக் கடனை நிறைவேற்றி சுவாமியை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com