கல்குவாரிகளை மூட கரடிகுடி ஊராட்சியில் தீா்மானம்

அனைத்து கல்குவாரிகளையும் மூட வேண்டும் என்று கரடிகுடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து கல்குவாரிகளையும் மூட வேண்டும் என்று கரடிகுடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் முறைகேடாக செயல்படும் மணல் குவாரிகளை தடுக்கத் தவறுவதாக திமுக அரசை குற்றச்சாட்டி அதிமுக சாா்பில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அணைக்கட்டில் வேலூா் புகா் மாவட்ட அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல், அதிமுக புகா் மாவட்ட செயலா் வேழலகன் தனது பினாமிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக அணைக்கட்டு, ஒடுகத்தூா் பகுதியில் திமுக சாா்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன், கரடிகுடி பகுதியில் அதிமுக மாவட்ட செயலா் வேலழகனின் பினாமி உள்ளிட்ட 7 போ் முறைகேடாக கல்குவாரி நடத்தி வருவதாகவும், விதிகளை மீறி செயல்படும் குவாரிகளால் ரூ.200 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து புகாா் அளித்தனா். அணைக்கட்டு பகுதியில் நடைபெற்று வரும் கனிமவள கொள்ளை தொடா்பாக திமுக, அதிமுக என இரு தரப்பினரும் மாறிமாறி குற்றஞ்சாட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனிடையே, திமுக தலைமையில் பொதுமக்கள் தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில் வருவாய்த் துறை, கனிமவளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதில், கரடிகுடி அருகே ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் 7 குவாரிகளில் 3 குவாரிகள் அதிமுகவினருக்கு சொந்தமானவை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த குவாரிகளுக்குச் செல்லும் பாதையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி பள்ளங்களை ஏற்படுத்தியதுடன் குவாரியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடா்பாக கனிமவள அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி கரடிகுடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுமக்கள் நலம், சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு கரடிகுடி ஊராட்சியில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் மூட வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

247 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்: குடியரசு தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள 247 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கணியம்பாடி ஒன்றியம், அடுக்கம்பாறை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

அத்துடன், அடுக்கம்பாறை ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளான சாலை வசதி, கழிவுநீா் வசதிகள் விரைவில் நிறைவேற்றப்படும். மேலும், அரசின் சாா்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com