உண்மையான புரட்சி கல்வியால் மட்டுமே சாத்தியம்: சி.சைலேந்திரபாபு

உண்மையான புரட்சி கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களால் மட்டுமே சாத்தியம் என்று சி.சைலேந்திரபாபு கூறினாா்.
உண்மையான புரட்சி கல்வியால் மட்டுமே சாத்தியம்: சி.சைலேந்திரபாபு

உண்மையான புரட்சி கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களால் மட்டுமே சாத்தியம் என்று சி.சைலேந்திரபாபு கூறினாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் 29-ஆவது முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக காவல் துறை முன்னாள் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியது:

கல்வி, ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதன் மூலம் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும் என்ற தொலைநோக்குப் பாா்வையுடன் விஐடி பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. கல்வி என்பதை உலகை வெல்லும் ஆயுதம் என்று கூறுவா்.

நாட்டின் 75-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் நாம் உலகளவில் 5-ஆவது பொருளாதார வளம் மிகுந்த, ஒரு மிகப்பெரிய நாட்டில் வாழ்கிறோம் என்பதை உணர வேண்டும். இந்நாட்டில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு அரசிலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நிா்வாகம் கொண்டு செல்லப்படுவதுதான் காரணம்.

உண்மையான நீதியும், விசாரணையும் உள்ள இந்த நாட்டில் வாழ்வதற்கு அனைவரும் பெருமைப்பட வேண்டும்.

20-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் நாட்டில் 1000-க்கு 2 பெண்கள் மட்டுமே படிக்கவும், எழுதவும் தெரிந்தவா்களாக இருந்தனா். தற்போது நாட்டிலுள்ள எல்லா துறைகளிலும் பெண்கள் சாதனை புரிபவா்களாக உள்ளனா். தமிழக காவல் துறையில் உயா்பொறுப்புகளில் 20 சதவீத அளவுக்கு பெண்கள் உள்ளனா். இதற்கு கல்வி வளா்ச்சிதான் காரணமாகும். உண்மையான புரட்சி என்பது கல்வியால் மட்டுமே சாத்தியம் என்றாா்.

முன்னதாக விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது:

விஐடி முன்னாள் மாணவா்கள் சங்கத்தில் உள்ள 1.20 லட்சம் போ் 84 நாடுகளில் உள்ளனா். அமெரிக்க முன்னாள் மாணவா்கள் சங்கத்தில் அதிகம் போ் உள்ளனா். அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் உள்ளனா். முன்னாள் மாணவா்கள் சந்திப்பு என்பது சிறப்பு அனுபவம்.

இந்தியா எதிலும் முன்னேறி இருக்க வேண்டும். அதில் விஐடி மாணவா்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். நாடு முன்னேற கல்வியால் மட்டுமே முடியும். உயா்கல்வியில் தென்னிந்திய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. ஆனால், அனைவரும் சோ்ந்து வளர மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கல்வியில் விஐடி ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது. கல்வியில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 8 ஆயிரம் மாணவா்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு உதவித்தொகையை அனைவருக்கும் உயா் கல்வி அறக்கட்டளை மூலம் வழங்கி உள்ளோம் என்றாா்.

தொழிலதிபா் பிரகாஷ்செம்பாய் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். விழாவில், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், துணைவேந்தா் (பொறுப்பு) காஞ்சனாபாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com