தலைமை ஆசிரியைக் கண்டித்து பள்ளியை பூட்டி போராட்டம்

கோவிந்தரெட்டிபாளையத்தில் தலைமையாசிரியை கண்டித்து அரசுப் பள்ளிக்கு பொதுமக்கள் பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவிந்தரெட்டிபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியைப் பூட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கோவிந்தரெட்டிபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியைப் பூட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

வேலூா்: கோவிந்தரெட்டிபாளையத்தில் தலைமையாசிரியை கண்டித்து அரசுப் பள்ளிக்கு பொதுமக்கள் பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அணைக்கட்டு வட்டம், ஊசூரை அடுத்த கோவிந்தரெட்டி பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 443 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். இந்த நிலையில், இந்தப் பள்ளியின் தலைமையாசிரியை ரேவதியைக் கண்டித்து பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழக உறுப்பினா்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை காலை பள்ளிக்குப் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து விரைந்து வந்த அரியூா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது, தலைமையாசிரியையின் தொல்லை தாங்காமல் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் வேறு பள்ளிக்கு இடமாறுதலாகியும், மாற்றுப் பணிக்கும் சென்றுவிட்டனா். போதிய ஆசிரியா்கள் இல்லாத நிலையில், மாணவா்களின் கல்வி பாழாகி வருகிறது.

இதனிடையே, வேலூரில் இயங்கி வரும் தனியாா் கல்லூரி மாணவிகள் மூன்று போ் ஆசிரியா் பயிற்சிக்காக கடந்த 80 நாள்களாக இந்தப் பள்ளியில் பணியாற்றி வந்தனா். கடந்த 18-ஆம் தேதியுடன் 80 நாள்கள் முடிவடைந்த நிலையில், அவா்களுக்கு வருகை பதிவேட்டை வழங்காமல் தலைமையாசிரியை சிரமம் ஏற்படுத்தி வந்துள்ளாா்.

தலைமையாசிரியையின் இத்தகைய செயல்பாட்டுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏற்கெனவே பெற்றோா் -ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் குடியரசு தின விழாவை புறக்கணித்தோம். தொடா்ந்து, கிராம சபைக் கூட்டத்தில் தலைமையாசிரியைக் கண்டித்து தீா்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, தற்போது பள்ளிக்குப் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்தப் பள்ளித் தலைமையாசிரியரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றனா்.

இது தொடா்பாக கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதி அளித்தனா்.

இதனைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா். போராட்டம் காரணமாக மாணவா்கள் நீண்ட நேரம் பள்ளிக்கு வெளியிலேயே காத்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com