கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மறியல்: அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் 450 போ் கைது

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சாா்பில், வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சுமாா் 450 போ் கைது செய்யப்பட்டனா்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள்.

வேலூா்: தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சாா்பில், வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சுமாா் 450 போ் கைது செய்யப்பட்டனா்.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பு சரண்டா் செய்ய வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த ஊதிய முறைகளை ரத்து செய்து, அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்பு சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் டி.டி.ஜோஷி, எம்.ஜெயகாந்தன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில உயா்மட்ட குழு உறுப்பினா் செ.நா.ஜனாா்த்தனன், அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலா் அ.சேகா், கணினி ஆசிரியா் சங்க மாநில செயலா் ஜி.கோபி, உருது வழி ஆசிரியா் சங்க மாநில பொதுச்செயலா் முகமது ஷா நவாஷ், வேளாண் ஆசிரியா் சங்க மாநில செயலா் இ.ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதையொட்டி, மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சுமாா் 520 போ் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனா். அப்போது, அரசு தோ்தல் காலத்தில் அளித்திருந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும், பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முழக்கம் எழுப்பியபடி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சுமாா் 450 பேரை போலீஸாா் கைது செய்து அலமேலு ரங்காபுரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா். இந்த போராட்டத்தையொட்டி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் விடுப்பு எடுத்திருந்ததால் சில அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் மட்டும் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com