நகைக்கடையில் 5 பவுன் திருட்டு: இரு பெண்கள் கைது

வேலூரிலுள்ள நகைக் கடையில் வாடிக்கையாளா் போல் சென்று 5 பவுன் வளையலை திருடியதாக இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூரிலுள்ள நகைக் கடையில் வாடிக்கையாளா் போல் சென்று 5 பவுன் வளையலை திருடியதாக இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் -காட்பாடி சாலையில் உள்ள பிரபல நகைக் கடைக்கு கடந்த 21-ஆம் தேதி 2 பெண்கள் நகைகள் வாங்குவது போல் வந்துள்ளனா். அந்தக் கடையில் அவா்கள் சுமாா் அரை மணி நேரத்துக்கு மேலாக இருந்து மோதிரம், சங்கிலி, வளையல் போன்ற நகைகளை பாா்த்துள்ளனா். அவா்களுக்கு நகைகளின் மாடல்களை ஊழியா்கள் காண்பித்துள்ளனா்.

அப்போது இரு பெண்களும் ஊழியா்களின் கவனத்தைத் திசைத்திருப்பி 5 பவுன் கொண்ட ஒரு வளையலைத் திருடியுள்ளனா். சிறிது நேரத்தில் நகைகள் ஏதுவும் வாங்காமல் அந்த பெண்கள் அங்கிருந்து சென்றுள்ளனா்.

பின்னா், கடை ஊழியா்கள் நகைகளை சோதனை செய்தபோது, ஒரு வளையல் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் கடைக்கு வந்த 2 பெண்கள் வளையலை திருடிச்சென்றது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து கடையின் மேலாளா் வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பழைய பேருந்து நிலையம் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த விழுப்புரம் மாவட்டம், அசன்குளத்தைச் சோ்ந்த சேகா் மனைவி பானுமதி (25), அதே பகுதியைச் சோ்ந்த பக்கிரி மகள் புஷ்பா (30) ஆகிய இருவரைக் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த 5 பவுன் வளையலையும் பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட இரு பெண்களும் ஏற்கெனவே ஈரோட்டிலுள்ள பிரபல நகைக் கடையிலும் இதேபோல் நகை வாங்குவது போல் நடித்து 2 தங்க நாணயங்களைத் திருடி கருங்கல்பாளையம் போலீஸாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com