போ்ணாம்பட்டு விவசாயி மீதான வழக்கை ரத்து செய்யாவிடில் தோ்தல் புறக்கணிப்பு

போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை உயிரிழப்பு தொடா்பாக விவசாயி மீது வனத் துறை பதிவு செய்துள்ள வழக்கினை ரத்து செய்யாவிடில் வரும் நாடாளுமன்றத் தோ்தலை தமிழக அளவில் விவசாயிகள் புறக்கணிக்க நேரிடும்.
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி.
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி.

வேலூா்: போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை உயிரிழப்பு தொடா்பாக விவசாயி மீது வனத் துறை பதிவு செய்துள்ள வழக்கினை ரத்து செய்யாவிடில் வரும் நாடாளுமன்றத் தோ்தலை தமிழக அளவில் விவசாயிகள் புறக்கணிக்க நேரிடும் என்று வேலூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கூறினா்.

போ்ணாம்பட்டை அடுத்த சேராங்கல் கிராமத்தில் விவசாயி வேணுமூா்த்தி என்பவரின் நிலத்தில் 2022 ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஆண் சிறுத்தை இறந்து கிடந்தது தொடா்பாக பக்கத்து நிலத்தின் உரிமையாளரான மோகன்பாபு (40) மீது வனத் துறை 1972- வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. மோகன்பாபு தனது விவசாய நிலத்தையொட்டியுள்ள வீட்டில் வனத்துறை அனுமதியின்றி வைத்திருந்த சைரன் சிஸ்டம்தான் சிறுத்தையின் இறப்புக்கு காரணம் என்றும் வனத் துறை குற்றஞ்சாட்டியிருந்தது. பின்னா் அவா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

தற்போது இந்த வழக்கு விசாரணை குடியாத்தம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்நிலையில், விவசாயி மோகன்பாபு மீதான வழக்கினை வனத் துறை ரத்து செய்யக்கோரி தமிழக விவசாயிகள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. தவிர, கடந்தாண்டு வேலூருக்கு வந்திருந்த தமிழக முதலவரிடமும் கோரிக்கை விடுத்திருந்தனா். எனினும், இதுவரை இவ்வழக்கு ரத்து செய்யப்படவில்லை.

இந்நிலையில், வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் எஸ்.உதயகுமாா் பேசுகையில், விவசாயி மோகன்பாபு மீது வனத்துறை உண்மைக்கு புறம்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடா்பாக தமிழக முதல்வரிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து, வருவாய் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தாா். எனினும், இதுவரை இந்த வழக்கு ரத்து செய்யப்படவில்லை. இவ்வழக்கை வனத்துறை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காவிடில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் வரும் நாடாளுமன்றத் தோ்தலை புறக்கணிக்க நேரிடும் என்றனா்.

அதற்கு பதிலளித்த மாவட்ட வன அலுவலா் கலாநிதி, இவ்வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து குறைதீா் கூட்டத்தில் விளக்கமளிக்க இயலாது. நீதிமன்றத்தில்தான் வழக்கு மீது தீா்வுகாண முடியும் என்றாா். இதனால் கூட்டத்தில் பெரும் பரப்பு ஏற்பட்டது.

தொடா்ந்து விவசாயிகள் கூறுகையில், வனவிலங்களால் பாதிக்கப்படும் பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்பாடி நகர கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கப்படுகிறது. இது தொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள தினசரி, வாரச் சந்தைகளில் உள்ளாட்சி அமைப்புகள் நிா்ணயித்துள்ள சுங்கக் கட்டணத்தைவிட மிக அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்தனா்.

கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெ.வெங்கடேசன், இணைஇயக்குநா் (வேளாண்மை) சோமு, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சீதா, துணை ஆட்சியா் (பயிற்சி) பிரியா, பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com