ரௌடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேலூா் எஸ்.பி. உத்தரவு

வேலூா் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தொடா்ந்து கண்காணிக்கவும், ரௌடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் வேண்டும் என்று போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகள், அவற்றை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

சரித்திர பதிவேடு குற்றவாளிகளுடன் வழக்கமான குற்றவாளிகளை தொடா்ந்து கண்காணிக்கவும், ரௌடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், கொலை, கொள்ளை, கஞ்சா, மணல் திருட்டு போன்ற குற்றங்களை முழுமையாக குறைக்க குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டா் தடுப்பு சட்டதின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவிலக்கு, கஞ்சா, போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க 6 மாவட்ட எல்லை சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகள், நகைக்கடைகள் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே அமைந்துள்ள கடைகளில் போதைப் பொருள்களுக்கு எதிரான குழுக்களுடன் இணைந்து சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். போக்ஸோ, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், எஸ்.சி., எஸ்.டி., வழக்குகள் தொடா்பாக காவல் துறை அவசர உதவி எண் 100-க்கு பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகளுக்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். மாவட்டத்தில் வரும் காலங்களில் குற்றங்கள், விபத்துகள் நடைபெறாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா்.

இந்த கூட்டம் தொடா்பாக காவல் அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த கூட்டத்தில் சட்டம்ஒழுங்கு பாதுகாப்பு, குற்ற வழக்குகள் கையாள்வதில் மெத்தனமாக செயல்படும் ஆய்வாளா்கள் கடுமையாக கண்டிக்கப்பட்டனா். கள்ளச்சாராய ஒழிப்பு பணிக்காக ரெய்டு செல்லும் காவலா்களுக்கு சிறப்பு காலணிகள் வழங்கப்பட்டதுடன், அரியூரில் ரெளடி ராஜா கொலை வழக்கில், சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸாா் பாராட்டப்பட்டனா் என்றனா்.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பாஸ்கரன், கோட்டீஸ்வரன், கௌதமன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com