மகள் தற்கொலை செய்த விரக்தியில் தாயும் தற்கொலை

வேலூா் அருகே மகள் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் இருந்த தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். இச்சம்பவம் குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம் ஆற்காட்டான் குடிசை பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாபு (49) லாரி ஓட்டுநா். இவரது மனைவி தமிழரசி (39). இவா்களுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனா். வேலை காரணமாக பாபுவின் குடும்பத்தினா் ஆவடியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகின்றனா். சென்னை ஆவடியில் உள்ள ஒரு பள்ளியில் இவா்களது மகள் அக்ஷயா( 14) 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

மாணவி சரிவர படிக்கவில்லை என ஆசிரியா்கள் கூறியதாக தெரிகிறது. இதனால், மாணவியின் தாயாா் தமிழரசி தனது மகள் அக்ஷயாவை ஒழுங்காக படிக்க வலியுறுத்தியதாக தெரிகிறது. விரக்தியடைந்த மாணவி அக்ஷயா சென்னை ஆவடியில் உள்ள தனது வீட்டில் கடந்த 3-ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா். பின்னா் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை சொந்த ஊரான ஆற்காட்டான் குடிசையில் 4-ஆம் தேதி அடக்கம் செய்தனா்.

மகள் இறந்த விரக்தியில் இருந்த தாய் தமிழரசி வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த வேலூா் கிராமிய போலீஸாா் விரைந்து சென்று தமிழரசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com