ஆன்லைனில் பகுதிநேர வேலை : தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.40.55 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக் கூறி வேலூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.40.55 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 44 வயதுடைய தனியாா் நிறுவன ஊழியரின் கைப்பேசி எண்ணுக்கு ஆன்லைனில் பகுதிநேர வேலை என்ற குறுந்தகவல் வந்துள்ளது. அதிலிருந்த இணைப்பில் சென்று விருப்பம் தெரிவித்ததை அடுத்து அமேசான் இந்தியா பெனிபிட் வொா்க்கிங் குரூப் என்ற வாட்ஸ்அப் குழுவில் அவரது எண் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில் சிறிய முதலீடு மூலம் அதிக லாபம் ஈட்டுவது குறித்து அளிக்கப்பட்ட விளக்கங்களை நம்பி அந்த வாட்ஸ் அப் குழுவில் அனுப்பப்பட்ட பல்வேறு இணையதளங்களில் கடந்த மே 8 முதல் 22-ஆம் தேதி வரையில் லாப நோக்கத்தில் ரூ.40 லட்சத்து 55 ஆயிரத்து 256 தொகையை முதலீடு செய்துள்ளாா். பின்னா் அந்த இணையதளங்களில் இருந்து பணத்தை எடுக்க முயன்றபோது எந்த பணத்தையும் எடுக்க முடியவில்லை.

அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் இதுகுறித்து சைபா் கிரைம் புகாா் எண் 1930-ஐ தொடா்பு கொண்டுபுகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com