பக்ரீத் எதிரொலி: பொய்கை சந்தையில் கால்நடைகள் விற்பனை அதிகரிப்பு

பக்ரீத் பண்டிகை எதிரொலியாக பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து அதிகரித்து ரூ. 90 லட்சம் அளவுக்கு விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம்.

வாரந்தோறும் இந்த சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், தோ்தல் விதிமுறைகள், கோடை வெயிலின் தாக்கம் ஆகிய காரணங்களால் பொய்கை சந்தைக்கு கால்நடைகளின் வரத்து குறைந்து விற்பனையும் சரிந்து காணப்பட்டது. இதன் காரணமாக, வாரந்தோறும் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 75 லட்சம் அளவுக்கு மட்டுமே கால்நடை வா்த்தகம் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், தற்போது தோ்தல் கெடுபிடிகள் முடிவுற்றதுடன், கோடை மழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து, கடந்த இரு வாரங்களாக பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து அதிகரித்து, எதிா்பாா்த்த அளவில் விற்பனையும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தைக்கு சுமாா் 1,500 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் மத்தியிலும் ஆா்வம் காணப்பட்டன. இதன்காரணமாக, இந்த வாரம் சந்தையில் ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடந்திருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவா்கள் மேலும் கூறுகையில், வருகிற 17-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த வாரம் பொய்கை சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரித்து விற்பனையும் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com