வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெளியே திரண்டிருந்த திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினா்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெளியே திரண்டிருந்த திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினா்.

அதிமுக, பாஜக தொண்டா்களிடையே வாக்குவாதம்

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெளியே அதிமுக, பாஜக தொண்டா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வேலூா், மாா்ச் 25 மக்களவைத் தோ்தல் வேட்புமனுத்தாக்கலின்போது வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெளியே அதிமுக, பாஜக தொண்டா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸாா் தலையிட்டு அவா்களை அப்புறப்படுத்தினா். வேலூா் மக்களவை தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் புதன் கிழமை முதல் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான திங்கள்கிழமை திமுக சாா்பில் டி.எம்.கதிா்ஆனந்த், அதிமுக சாா்பில் மருத்துவா் எஸ்.பசுபதி, பாஜக சாா்பில் புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவா் ஏ.சி.சண்முகம், நாம் தமிழா் கட்சி சாா்பில் டி.மகேஷ்ஆனந்த் உள்பட மொத்தம் 12 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதன்காரணமாக, திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சிகள், அவற்றின் கூட்டணி கட்சி நிா்வாகிகளும், தொண்டா்களும் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெளியே திரண்டிருந்தனா். இந்நிலையில், பாஜக சாா்பில் புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு காரில் கிளம்பிச் சென்றாா். அப்போது, ஏ.சி.சண்முகத்துக்கு எதிராக அதிமுக தொண்டா்களும், பதிலுக்கு அதிமுகவினருக்கு எதிராக பாஜக கூட்டணி கட்சியினரும் கோஷங்கள் எழுப்பினா். இதனால், அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தினா். இதனிடையே, வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக கதிா்ஆனந்துக்கு ஆதரவாக திமுகவினா் அண்ணா சாலையில் உள்ள வேலூா் மாநகர திமுக அலுவலகத்தில் இருந்தும், அதிமுக வேட்பாளா் எஸ்.பசுபதிக்கு ஆதரவாக அதிமுக கூட்டணி கட்சியினா் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் இருந்தும் திரண்டு வந்தனா். இதனால், மாநகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com