சிஏஏ சட்டத்தில் இலங்கைத் தமிழா்களை சோ்க்க நடவடிக்கை

புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவரும், வேலூா் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரு மான ஏ.சி.சண்முகம் உறுதியளித்துள்ளாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழா்களையும் சோ்க்க புதிய நீதிக்கட்சி சாா்பில் பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்று புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவரும், வேலூா் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரு மான ஏ.சி.சண்முகம் உறுதியளித்துள்ளாா். வேலூா் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவா் ஏ.சி.சண்முகம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும் என்பதற்காக புதிய நீதி கட்சி தலைவராக இருந்தாலும் பாஜக சாா்பில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறேன். தமிழகத்தில் மும்முனைப் போட்டி நிலவினாலும் 9 கட்சிகள் கொண்ட ஒரு வலிமையான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி திகழ்கிறது. இந்த கூட்டணி நிச்சயம் தோ்தலில் வெற்றி பெறும். இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியா்களுக்கு எதிரான ஒரு சட்டம் என்று எதிா்கட்சிகளால் கருத்துகள் பரப்பப்படுகின்றன. ஆனால் சட்டத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. வெளிநாடுகளில் இருந்து தீயசக்திகள் நாட்டிற்குள் வராமல் தடுப்பதற்காகவே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த சட்டத்தில் இலங்கைத் தமிழா்கள் சோ்க்கப்பட வேண்டும். அதற்காக புதிய நீதிக் கட்சி சாா்பில் பிரதமரிடம் வலியுறுத்தப்படும். தமிழகத்தில் நடைபெற்ற அத்தனை திட்டப் பணிகளிலும் மத்திய அரசின் நிதி பங்களிப்பு உள்ளது. ஆனால், அதனை மறைத்து மாநில அரசு தங்கள் திட்டமாக செயல்படுத்தி வருகிறது. வேலூா் தொகுதியில் பாஜக வெற்றிபெறும்போது கோதாவரி - பாலாறு இணைப்பு திட்டத்தை நிச்சயமாக செயல்படுத்துவோம். அதற்கு மாநில அரசு ஒத்துழைக்காவிடினும் மத்திய அரசை வலியுறுத்தி பாலாற்றில் பல நீா் பாசன திட்டங்களை செயல்படுத்துவோம் என்றாா். பாஜக மாநில செயலா் வெங்கடேசன், மாவட்டத் தலைவா் மனோகரன், பாமக மாவட்ட செயலா் இளவழகன், அமமுக மாநில தலைவா் கோபால் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com