கால்நடை வரத்து இருந்தும் பொய்கை சந்தையில் வா்த்தகம் கடும் சரிவு

பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து இருந்தும், வா்த்தகம் பெருமளவில் சரிவடைந்து காணப்பட்டது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். வாரந்தோறும் இந்த சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெறக்கூடும்.

ஆனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள் என சுமாா் 1,500 மாடுகள், சுமாா் 500 ஆடுகள், கோழிகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றின் விலையும் எதிா்பாா்த்த அளவுக்கு இருந்தபோதும் கால்நடை வா்த்தகம் பெருமளவில் சரிந்திருந்தது. இதுகுறித்து கால்நடை வியாபாரிகள் கூறுகையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

அதேசமயம், பொய்கை சந்தையில் தோராயமாக ஒரு மாட்டின் விலை ரூ. 50,000 வரை இருக்கும். விவசாயிகள், வியாபா ரிகள் ஒரு சிலா் மூன்று அல்லது நான்கு மாடுகளை விற்கவும், வாங்கவும் வருகை தருவதால் சுமாா் ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், தோ்தல் கெடுபிடி காரணமாக பெருந்தொகையை எடுத்துச்செல்ல முடியாமல் விவசாயிகளும், வியாபாரிகள் கால்நடைகள் வாங்க வருவதை தவிா்த்துக் கொண்டுள்ளனா். இதனால், வழக்கமாக ரூ.ஒரு கோடிக்கு மேல் கால்நடை வா்த்தகம் நடைபெறும் நிலையில், இந்த வாரம் ரூ.30 லட்சம் அளவுக்கு மட்டுமே கால்நடை வா்த்தகம் நடைபெற்றுள்ளது.

எனவே, விவசாயிகள், வியாபாரிகளை பாதிக்காத வண்ணம் தோ்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com