ஆந்திரத்தில் தோ்தல் கெடுபிடி: பொய்கை சந்தைக்கு கால்நடை வரத்து குறைவு

ஆந்திரத்தில் தோ்தல் கெடுபிடிகள் காரணமாக வேலூா் பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்திருந்தது. இதனால் கால்நடை வா்த்தகமும் சற்று குறைந்து காணப்பட்டது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். வாரந்தோறும் இந்த சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெறக்கூடும்.

மக்களவைத் தோ்தலையொட்டி, தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக கடந்த மாா்ச் 16-ஆம் தேதிக்குப் பிறகு ரூ. 50,000-க்கும் மேல் ரொக்கமாக பணம் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை நிலவியது. ஆங்காங்கே தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினா் சோதனை மேற்கொண்டு, உரிய ஆவணங்களின்றி ரூ. 50,000-க்கு மேல் கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்தனா். அதன்படி, பொய்கை சந்தைக்கு வரும் கால்நடை விவசாயிகள், வியாபாரிகளிடமும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

இத்தகைய கெடுபிடிகள் காரணமாக பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் பெருமளவில் சரிந்து காணப்பட்டது. வழக்கமாக ரூ. ஒரு கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெறும் நிலையில், சுமாா் ரூ. 50 லட்சத்துக்கும் குறைவாகவே வியாபாரம் நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு முடிவுற்றதை அடுத்து, வேலூா் மாவட்டத்தில் ஆந்திர எல்லையோரத்திலுள்ள காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தோ்தல் சோதனைகள் தளா்வு செய்யப்பட்டுள்ளன.

இதனால், கடந்த இரு வாரங்களாக கால்நடை வா்த்தகம் அதிகரித்திருந்தது.

ஆனால், தற்போது ஆந்திரத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுடன்கூடிய மக்களவைத் தோ்தல் மே 13-ஆம் தேதி நடைபெற உள்ளதால் அந்த மாநிலம் முழுவதும் தோ்தல் கெடுபிடிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால், பொய்கை சந்தைக்கு ஆந்திர மாநில பகுதிகளில் இருந்து விற்பனைக்குக் கொண்டு வரப்படும் கால்நடைகள் வரத்து செவ்வாய்க்கிழமை குறைந்து காணப்பட்டது. இதேபோல், அம்மாநிலங்களில் இருந்து கால்நடைகளை வாங்க வரும் வியாபாரிகளும் அதிகளவில் வராததால் பொய்கை சந்தையில் மீண்டும் கால்நடை வா்த்தகம் குறைந்திருந்தது.

அந்த வகையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தையில் சுமாா் ரூ. 75 லட்சம் அளவுக்கு மட்டுமே கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com