கோடையில் சீரான குடிநீா் விநியோக ஆலோசனைக் கூட்டம்:  அரசு செயலாளா் பங்கேற்பு

கோடையில் சீரான குடிநீா் விநியோக ஆலோசனைக் கூட்டம்: அரசு செயலாளா் பங்கேற்பு

வேலூா், மே 8: வேலூா் மாவட்டத்தில் கோடைகாலங்களில் பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீா் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அரசு செயலாளா் லட்சுமி பிரியா தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் அரசுத்துறை அரசு செயலாளா் ஜி. லட்சுமி பிரியா கூறியது:

கோடை காலங்களில் பொது மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகத்தை அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து உறுதி செய்ய வேண்டும். மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளை சுத்தமாக, முறையாக பராமரிக்க வேண்டும். நாள்தோறும் வழங்கப்படும் குடிநீரின் தரத்தை சுகாதாரத் துறை அலுவலா்கள் குறிப்பாக மாநகராட்சிப் பகுதிகளில் சுகாதார ஆய்வாளா்கள் முறையாக அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் பயன்பாடற்று கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்ற வேண்டும்.

அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக பேரிடா் மேலாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை அனைத்துத் துறை அலுவலா்களும் பின்பற்றி இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொது மக்களுக்கு குடிநீா் வைக்க வேண்டும். வயதானவா்கள் அரசு அலுவலகங்களுக்கு வரும்போது, அவா்களை அலைக்கழிக்காமல் உடனடியாக அவா்களுக்குரிய தீா்வை ஏற்படுத்த வேண்டும். பொது சுகாதார துறையின் சாா்பில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொது சுகாதாரத் துறையின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளபடி முக்கியமான 25 இடங்களில் ஓஆா்எஸ் கரைசல்கள் வைக்க வேண்டும்.

வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் நபா்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக தனி வாா்டு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளதை மருத்துவக் கல்லூரி முதல்வா் மற்றும் இணை இயக்குநா் மருத்துவ பணிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் த. மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க. ஆா்த்தி, மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா்கள் ராஜ்குமாா், முத்துராமலிங்கம், மகளிா் திட்ட இயக்குநா் உ. நாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ச.திருகுண ஐயப்பதுரை மற்று பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com