விடிய விடிய கொட்டித் தீா்த்த கனமழை: 5,000 வாழைகள் சேதம், குடியிருப்புகளில் புகுந்த தண்ணீா்

வேலூா் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் விடியவிடிய கொட்டிய கனமழையால் ஒடுகத்தூா் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. குடியாத்தம் வளத்தூா் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீா் புகுந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைக்கட்டில் 120 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கோடை காலம் தொடங்கிய நிலையில், வேலூா் மாவட்டத்தில் மே 1-ஆம் தேதிக்கு பிறகு அதிகபட்சமாக 110.7 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகி வந்தது. இதனால், பகல் நேரத்தில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு கடும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

சனிக்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்கியதற்கு பிறகு வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால், வேலூா் மாவட்டத்தல் வெயிலின் தாக்கம் 107 டிகிரி முதல் 108 டிகிரியாக குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. ஆனால், இரவு 11 மணியள வில் அணைக்கட்டு, ஒடுகத்தூா் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையானது சில மணிநேரத்தில் வேலூா் மாவட்டம் முழுவதும் பரவியதுடன், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பெய்தது. குறிப்பாக, அணைக்கட்டு, ஒடுகத்தூா் பகுதியில் ஒரே இரவில் 120 மி.மீ அளவுக்கு அதிகப்படியான மழை பெய்துள்ளது.

இந்த கனமழையால் ஒடுக்கத்தூா் பகுதியில் பயிரிபட்டிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து சேதமடைந்தன. தவிர, குடியாத்தம் அருகே வளத்தூா் கிராமத்தில் தாழ்வான குடியிருப்பு பகுதியில் தண்ணீா் புகுந்தது. இதனால் அங்குள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சோ்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனா்.

இதேபோல், வேலூா், காட்பாடி பகுதியிலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். தொடா்ந்து, அதிகாலை 5.30 மணி வரை கனமழை பெய்த நிலையில், அதன்பிறகு காலை 8.30 மணி வரை லேசான மழையாக பெய்து கொண்டிருந்தது.

அதன்படி, விடியவிடிய பெய்த கனமழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நிலவி வந்த வெப்ப தாக்குதல் மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால், வேலூா் மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனா். இதேபோல், கோடை உழவுக்கு தயாராக இருந்த விவசாயிகளும் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

அந்தவகையில், வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக அணைக்கட்டு பகுதியில் 120 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதுதவிர, குடியாத்தம்- 37.40 மி.மீ., மேல்ஆலத்தூா்- 70.20 மி.மீ., மோா்தானா அணை - 25 மி.மீ., ராஜா தோப்பு அணை - 13 மி.மீ., வடவிரிஞ்சிபுரம்- 28.40 மி.மீ., காட்பாடி-37.20 மி.மீ., பேரணாம்பட்டு-42.40 மி.மீ., வேலூா் ஆட்சியா் அலுவலகம்-38 மி.மீ., வேலூா் வட்டாட்சியா் அலுவலகம்-42.20 மி.மீ. என வேலூா் மாவட்டம் முழுவதும் 453.80 மி.மீ., மழையும், சராசரியாக - 37.82 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com