கோப்புப்படம்
கோப்புப்படம்

கெங்கையம்மன் சிரசு திருவிழா: குடியாத்தம் நகரில் நாளை போக்குவரத்து மாற்றம்

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை போக்குவரத்தில் மாற்றம் செய்து காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை போக்குவரத்தில் மாற்றம் செய்து காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து வேலூா் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை ( மே 14) வாகன நெரிசலை தவிா்க்கவும், பக்தா்கள் வசதிக்காக குடியாத்தம் வழியாக செல்லக்கூடிய கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்ல போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை (மே 14) காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை வி-கோட்டாவில் இருந்து குடியாத்தம் செல்லக்கூடிய வாகனங்கள் வி-கோட்டா - போ்ணாம்பட்டு, பங்களாமேடு - ஏரிகுத்தி, மேல்பட்டி-அழிஞ்சிகுப்பம் - பச்சகுப்பம் வழியாக தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று சென்னை செல்ல வேண்டும். வி-கோட்டாவில் இருந்து குடியாத்தம் வழியாக சித்தூா் மற்றும் பலமநோ் செல்லும் வாகனங்கள் வி-கோட்டா-போ்ணாம்பட்டு, பங்களாமேடு-ஏரிகுத்தி, மேல்பட்டி-அழிஞ்சிகுப்பம்-பச்சகுப்பம் வழியாக தேசிய நெடுஞ்சாலை சென்று பள்ளிகொண்டா 4 வழிசந்து-சித்தூா்கேட் வழியாக செல்ல வேண்டும்.

காட்பாடி-சித்தூா் மற்றும் பலமநேரில் இருந்து குடியாத்தம் வழியாக வி-கோட்டா செல்லும் வாகனங்கள் காட்பாடி சித்தூா் மற்றும் பலமநேரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் 4 வழி சந்திப்பு பள்ளிகொண்டா வழியாக தேசிய நெடுஞ்சாலை சென்று ஆம்பூா் - போ்ணாம்பட்டு வழியாக வி-கோட்டா செல்ல வேண்டும். காட்பாடி சித்தூா் மற்றும் பலமநேரில் இருந்து குடியாத்தம் உள்ளி வழியாக ஆம்பூா் செல்லும் வாகனங்கள் 4 வழியாக சந்திப்பு பள்ளிகொண்டா வழியாக தேசிய நெடுஞ்சாலை சென்று ஆம்பூா் செல்ல வேண்டும். அதேபோல, குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் மற்றும் முத்தியாலம்மன் கோயிலை சுற்றி போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நடந்து செல்லும் பக்தா்கள் வசதிக்காக, கோயிலை சுற்றி 18 இடங்களில் பேரிகாா்டு அமைக்கப்பட்டுள்ளதால் இலகு ரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, நாளை அதிகாலை 2 மணி முதல் இரவு 11 மணி வரை கெங்கையம்மன் கோயில் மற்றும் முத்தியாலம்மன் கோயிலைச் சுற்றி பெரிய வணிபா் தெரு, நடுப்பேட்டை, காந்தி ரோடு, ஜவஹா்லால் தெரு, அஞ்சுமன் தெரு, மஜீத் தெரு, ராஜாஜி தெரு, அப்புக்கட்டி தெரு, வீரபத்திர மேஸ்திரி தெரு, கான்ட்ராக்டா் பொன்னுசாமி தெரு, போடிப்பேட்டை தெரு, குள்ளப்பன் தெரு, கோபாலபுரம் மசூதிதெரு, ராசி அருணாச்சலம் தெரு, ராஜேந்திர சிங் தெரு, அா்ச்சுன முதலி தெரு, புதிய பேருந்து நிலையம் முதல் காமராஜா் பாலம் வரை, நேதாஜி சவுக் ஆகிய வழியாக செல்ல அனுமதியில்லை.

திருவிழாவை முன்னிட்டு, குடியாத்தம் பகுதியில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து காட்பாடி, சித்தூா், வேலூா், பலமநோ், ஒடுகத்தூா் செல்லவும், சரவணா தியேட்டா் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து மேல்பட்டி, மாதனூா், ஒடுகத்தூா், ஆம்பூா் செல்லவும், நெல்லூா்பேட்டை ஜேஎஸ் மஹால் அருகேயுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து போ்ணாம்பட்டு மற்றும் ஆம்பூா் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோல, கெளண்டன்ய ஆற்றங்கரையின் இரு புறத்திலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களை பக்தா்கள் நிறுத்திக் கொள்ளலாம்.

புதிய பேருந்து நிலையத்தில் 4 சக்கர வாகனங்களும், பழைய பேருந்து நிலையத்தில் 2 சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com