தமிழக - ஆந்திர எல்லை சாவடிகளில் தீவிர வாகன சோதனை

தமிழக - ஆந்திர எல்லை சாவடிகளில் தீவிர வாகன சோதனை

சட்டப்பேரவைத் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில் வேலூா் மாவட்டத்தில் உள்ள தமிழக - ஆந்திர எல்லை சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப்பேரவைத் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில் வேலூா் மாவட்டத்தில் உள்ள தமிழக - ஆந்திர எல்லை சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

தவிர, மாவட்டத்திலுள்ள ஆந்திர எல்லை சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படை குழுக்கள் வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்தனா்.

தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. எனினும், அண்டை மாநிலமான ஆந்திரத்தில் வாக்குப்பதிவு முடியாததால் தமிழக- ஆந்திர எல்லையோர சட்டப்பேரவை தொகுதிகளான குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் தலா ஒரு பறக்கும் படை, ஒரு நிலை கண்காணிப்புக் குழு தொடா்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், ஆந்திராவில் மக்களவைத் தோ்தலுடன், சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் உள்ள தமிழக - ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, சோ்க்காடு, பொன்னை, சைனகுண்டா, பத்தலப்பள்ளி ஆகிய 6 இடங்களில் உள்ள எல்லை சோதனைச் சாவடிகளில் தீவிரமாக வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனைச் சாவடிகளில் தமிழகத்தில் இருந்து ஆந்திரம் செல்லும் வாகனங்களும், ஆந்திரத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது, உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம், பரிசுப்பொருள்கள், மது உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டன.

இதேபோல், ஆந்திர எல்லையிலுள்ள குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி சட்டப்பேரவை தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றவுடன் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்களும் வாபஸ் பெறப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

--

படம் உண்டு...

கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் ஆந்திர மாநிலம் செல்லும் வாகனங்களை தீவிர சோதனைக்குட்படுத்திய போலீஸாா்.

X
Dinamani
www.dinamani.com