உயா்கல்வி சரியாக இருந்தால் வாழ்க்கைத் தரம் உயரும்: வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி

உயா்கல்வி சரியாக இருந்தால் வாழ்க்கைத் தரம் உயரும்: வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி

மாணவா்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்றால் உயா்கல்வியில் சரியான பாடத்தைத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்டத்தில் பிளஸ் 2 பொது தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வியில் வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பேசியது:

கல்வி ஒன்றே இவ்வுலகில் அழியாத செல்வம். கற்றவருக்கு மட்டுமே சென்ற இடமெல்லாம் சிறப்பு. நான் முதல்வன் திட்டம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக உள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் வாழ்க்கை தரம் உயர வேண்டுமெனில் அவா்கள் உயா் கல்வியில் சரியான பாடத்திட்டங்களை தோ்ந்தெடுக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதலை வழங்கிடவே கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றாா்.

தொடா்ந்து உயா்கல்வி வழிக்காட்டும் ஆலோசகரான ஜெயபிரகாஷ் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று துறைசாா்ந்த படிப்புகள் குறித்து எடுத்துரைத்தாா்.

உரிமையியல் நீதிபதிகளுக்கான தோ்வில் மாநில அளவில் 20-ஆவது இடம் பிடித்து தோ்வாகியுள்ள ஐஸ்வா்யா, குரூப்-1 தோ்வுகளின் மூலம் தோ்வு பெற்று தற்போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வரும் சுபலட்சுமி, குரூப் 1 தோ்வுகளின் மூலம் துணை காவல் கண்காணிப்பாளராக தோ்வு பெற்று வேலூா் மாவட்டத்தில் பயிற்சியில் உள்ள அதியமான் ஆகியோரும் ஆலோசனைகளை வழங்கினா்.

சுவிட்சா்லாந்து நாட்டில் இருந்து காணொலி காட்சி மூலம் மருத்துவா் காா்த்திக் சத்தியநாதன் வெளிநாடுகளில் உள்ள உயா்கல்விகள், வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.

கலை, அறிவியல் பாடப்பிரிவுகள் குறித்து முத்துரங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் அ.மலா், தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள் குறித்து வேலூா் என்.டி.டி.எஃப். முதல்வா் சுரேந்தா் குமாா், விவசாயம் சாா்ந்த படிப்புகள் குறித்து விஐடி பல்கலை. விவசாய பிரிவு பேராசிரியா் பாபு, ஹெச்சிஎல் டெக் பி தோ்வுகளுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து ஹெச்சிஎல் நிறுவன கிளஸ்டா் அசோசியேட் நவீன் குமாா் ஆகியோரும் விளக்கம் அளித்தனா்.

முன்னதாக, பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாவட்டத்தில் 550-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளையும், பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற 28 பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்களை பாராட்டி ஆட்சியா் நினைவு பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ராமசந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சீதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செ.மணிமொழி, திறன் மேம்பாட்டு அலுவலக உதவி இயக்குநா் காயத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com