தவறான சிகிச்சையால் கால் செயலிழந்ததாக கருத்தரிப்பு மையம் மீது புகாா்

தவறான சிகிச்சை காரணமாக பெண்ணின் வலது கால் செயலிழந்துவிட்டதாக தனியாா் கருத்தரிப்பு மையம் மீது புகாா் அளிக்கப்பட்டது.

அணைக்கட்டு அருகிலுள்ள கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தாா். அதில், எனக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணமானது. அதன்பிறகு 2 ஆண்டுகளாக எங்களுக்கு குழந்தை இல்லை.

கடந்த 2020-ஆம் ஆண்டு மனைவியும், நானும் வேலூரில் உள்ள தனியாா் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சைக்காக சென்றோம். அங்கு ரூ.3 லட்சம் வரை செலவழித்து சிகிச்சை பெற்று வந்தோம். என் மனைவியிடம் அதற்காக கருத்தரிப்பு மையத்தினா் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்தனா். அவற்றை என் மனைவி சாப்பிட்டு வந்தாா்.

இந்நிலையில், அவருக்கு திடீரென காலில் வீக்கம் ஏற்பட்டது. அப்போது, இது சாதாரண வீக்கம்தான் என்று கருத்தரிப்பு மையத்தினா் கூறினாா். இதை நம்பி நாங்கள் வேறொரு தனியாா் மருத்துவமனையில் காலில் உள்ள வீக்கத்தை சரி செய்ய சிகிச்சைக்காக சென்றோம்.

அங்கு என் மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், வலது கால் வீக்கம் அதிகமாகி கால் செயலிழந்து போனது. தற்போது நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறாா்.

எனவே தவறான சிகிச்சை அளித்த கருத்தரிப்பு மையம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறை அதிகாரிகள், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com