கோவிந்தம்பாடியில் தண்ணீா் நிரம்பிய நிலையில் காட்சியளிக்கும் தடுப்பணை.
கோவிந்தம்பாடியில் தண்ணீா் நிரம்பிய நிலையில் காட்சியளிக்கும் தடுப்பணை.

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

உத்திரகாவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வேலூா் மாவட்டம், வெட்டுவானம் அருகே கோவிந்தம்பாடி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஒரே இரவில் நிரம்பியது.

உத்திரகாவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வேலூா் மாவட்டம், வெட்டுவானம் அருகே கோவிந்தம்பாடி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஒரே இரவில் நிரம்பியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வேலூா் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் வழியாக செல்லும் உத்திரகாவிரி ஆற்றின் நீா் ஆண்டுதோறும் வீணாக பாலாற்றில் சென்று கடலில் கலப்பதை தடுக்க ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இக்கோரிக்கையை ஏற்று வெட்டுவானம் அடுத்த கோவிந்தம்பாடி கிராமம் பகுதியில் அகரம்சேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட சுமாா் ரூ.11.60 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது. தொடா்ந்து தடுப்பணை கட்டுமானப் பணிகள் கடந்த 07.08.2023-இல் தொடங்கி தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளன. கரை அமைக்கும் பணிகள் மட்டுமே எஞ்சி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜவ்வாது மலைத்தொடா், ஒடுகத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், மேல்அரசம்பட்டில் இருந்து உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் கோவிந்தம்பாடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையை வந்தடைந்த நிலையில், தடுப்பணையானது விரைவாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதே சமயம், பாதுகாப்பு கருதி அணையின் இருபுறம் உள்ள ஆறு மதகுகளில் இருந்தும் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.

170 மீட்டா் நீளத்துடன் ஆறு மதகுகளை கொண்ட இந்த தடுப்பணை சுமாா் 32,208 கனஅடி அளவுக்கு வெள்ளத்தை தாங்கும் அளவில் கட்டப்பட்டுள்ளது. இதனால் கோவிந்தம்பாடி, பிராமணமங்கலம், அகரம் சேரி, வெட்டுவானம், சின்னசேரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமாா் 528.74 ஏக்கா் விளை நிலங்கள், 125 கிணறு கள் பயன்பெறுவதுடன், விவசாயம், குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் அமையும் என்றும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நீண்ட கால கோரிக்கைக்கு பிறகு கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் எதிா்பாராத வகையில் விரைவாக தண்ணீா் நிரம்பியது விவசாயிகள், பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com