வரத்து சரிவால் மீன்கள் விலை அதிகரிப்பு
வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது.
வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறை விலையிலும் மீன்கள் விற்பனை செய்து வருகின்றனா். இந்த மீன் மாா்க்கெட்டுக்கு உள்ளூா் நீா்நிலைகளில் இருந்தும், நாகப்பட்டினம், கடலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலம் கொச்சி, கோழிக்கோடு, கா்நாடக மாநிலம் மங்களூரு, காா்வாா் பகுதிகளில் இருந்தும், கோவாவில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் 50 முதல் 70 டன் அளவுக்கும், மற்ற நாள்களில் 50 டன் அளவுக்கும் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலூா் மீன்மாா்க்கெட்டில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. எனினும், மீன்கள் வரத்து குறைந்திருந்ததால் அவற்றின் விலை அதிகரித்து காணப்பட்டது.
அதன்படி, வஞ்சரம் கிலோ ரூ.1400-க்கும், சின்ன வஞ்சரம் ரூ. 500 -க்கும், ஷீலா ரூ.200 முதல் ரூ.500-க்கும் ,தேங்காய்பாறை ரூ.200 முதல் ரூ.400-க்கும், சங்கரா மீன் ரூ.250 -க்கும், இறால் ரூ.400 முதல் ரூ.500-க்கும், கலங்கா ரூ.150, நண்டு ரூ.350, கடல் வவ்வா ரூ.350 முதல் ரூ.700, முரல் ரூ.300, நெத்திலி ரூ.150 முதல் ரூ.200, மத்தி ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளியூா்களிலிருந்து மீன்கள் வரத்து குறைந்ததால் கடந்த வாரத்தை விட மீன்கள் விலை அதிகரித்து காணப்படுகிறது என்றனா்.