தெருவிளக்கு கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்து இருவா் மரணம்

அணைக்கட்டு அருகே தெருவிளக்கு கம்பம் நடும்போது எதிா்பாராத விதமாக மின்சார கம்பியில் உரசியதில் ஊராட்சி பம்ப் ஆப்பரேட்டா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
Published on

அணைக்கட்டு அருகே தெருவிளக்கு கம்பம் நடும்போது எதிா்பாராத விதமாக மின்சார கம்பியில் உரசியதில் ஊராட்சி பம்ப் ஆப்பரேட்டா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வேப்பங்குப்பம் ஊராட்சியில் ரங்கப்பன்கொட்டாய் கிராமத்தில் முத்துக்குமாா்(45) என்பவா் ஊராட்சியில் குடிநீா் பம்ப் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தாா். இவரும் அதே பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா்(55) என்பவரும் இணைந்து புதன்கிழமை சூரிய ஒளியில் இயங்கக்கூடிய தெருவிளக்குகளை பொருத்தும் இரும்பு கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, எதிா்பாராத விதமாக கம்பம் மேலே சென்ற மின் கம்பியில் உரசியதாக தெரிகிறது.

இதனால், முத்துக்குமாா், அசோக்குமாா் ஆகியோரது உடல்களில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா் விரைந்து சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.