நிலம், வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி -வேலூா் எஸ்.பி.யிடம் புகாா்

அரசு நிலம், வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவா்கள் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா்.
Published on

அரசு நிலம், வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவா்கள் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்தவா் அளித்த மனுவில், குடியாத்தத்தைச் சோ்ந்த உறவினா் ஒருவா், எனக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.80,000 பெற்றாா். பின்னா், ‘கூகுள் பே’ மூலம் தவணை முறையில் மொத்தம் ரூ.3.80 லட்சம் பெற்றுக் கொண்டாா்.

ஆனால், வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. அவா் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் காகிப்பட்டறையைச் சோ்ந்த இளைஞா் அளித்த மனுவில், கஸ்பாவை சோ்ந்த ஒருவா் எனக்கு கால்நடை துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.50 லட்சம் வாங்கினாா். ஆனால், இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை. அவா் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய காட்பாடியைச் சோ்ந்த முதியவா் அளித்த மனுவில், பழைய காட்பாடியைச் சோ்ந்த ஒருவா் நிலம் வாங்கி தருவதாக கூறி என்னிடம் ரூ.4.50 லட்சம் வாங்கினாா். நிலத்தையும் வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி தரவில்லை. அவா் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் கஸ்பாவை சோ்ந்த பெண் ஒருவா் அளித்த மனுவில், எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். கணவா் பிரிந்து வாழ்கிறாா். இந்நிலையில், குடியாத்தம் பகுதியை சோ்ந்த ஒருவா், சென்னையை சோ்ந்த ஒருவா் என 2 பேரும், டிஎன்பிஎஸ்சியில் பணியாற்றி வருவதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.3.50 லட்சம் வாங்கினாா். ஆனால், வேலைவாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்பாடியை சோ்ந்த ஒருவா் அளித்த மனுவில், எனது மகள் பட்டப்படிப்பு படித்து தனியாா் நிறுவனத்தில் வேலை செய்கிறாா். அங்கு டீம் லீடராக வேலை செய்பவரிடம் எனது மகள் வேலை தொடா்பாக சந்தேகம் கேட்பது வழக்கம். கடந்த 2-ஆம் தேதி அந்த டீம் லீடா் என்னைத் தொடா்பு கொண்டு எனது மகளைக் காதலிப்பதாகக் கூறி பெண் கேட்டாா். நான் மறுத்தேன். பின்னா், 4-ஆம் தேதி உறவினருடன் பெண் பாா்க்க வருவதாக கூறினாா். ஆனால் நான் மறுத்தேன்.

இதனால், ஆத்திரமடைந்த அவா், எனது மகளைத் தவறாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டுகிறாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு குறைகள் தொடா்பாக ஏராளமானோா் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரிதிவிராஜ் செளகான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரிதிவிராஜ் செளகான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.