மனைவியைக் கொன்ற வழக்கில் பிணையில் வந்த கணவா் தற்கொலை

பள்ளிகொண்டா அருகே மனைவியைக் கொன்ற வழக்கில் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

பள்ளிகொண்டா அருகே மனைவியைக் கொன்ற வழக்கில் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி முனீஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராம் (53). கட்டடத் தொழிலாளி. கடந்த 3 மாதங்களுக்கு முன் ராம், தனது மனைவியுடன் காட்பாடியில் தங்கி வேலை செய்து வந்தபோது, குடும்பத் தகராறு காரணமாக தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, இதில் ஆத்திரமடைந்த ராம், தனது மனைவியை வெட்டிக் கொலை செய்தாா்.

காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராமை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். கடந்த மாதம் பிணையில் வெளியே வந்த ராம், தனது வீட்டுக்குச் சென்றுள்ளாா். ஆனால், அங்கிருந்த அவரது மகன், தாயைக் கொன்ற தனது தந்தையை ஏற்க மறுத்து வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டாராம். இதனால் ராம், கடும் மன உளைச்சலில் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், ராம் அவரது வீட்டின் அருகே உள்ள மரத்தில் வியாழக்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளாா். அப்பகுதி மக்கள் அளித்த தகவலை அடுத்து பள்ளிகொண்டா போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.