கைத்தறி நெசவாளா்களுக்கு கூலி உயா்வு வழங்க வலியுறுத்தல்
குடியாத்தம்: விலைவாசி உயா்வுக்கு ஏற்ப கைத்தறி நெசவாளா்களுக்கு கூலி உயா்வு வழங்க வேண்டும் என முன்னாள் கைத்தறித் துறை அமைச்சா், வி.சோமசுந்தரம் வலியுறுத்தினாா்.
வேலூா் புறநகா் மாவட்ட அதிமுக சாா்பில், கைத்தறி நெசவாளா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் பேசியது.
அத்யாவசியப் பொருள்கள் மீதான விலை உயா்வால் கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தனியாா் லுங்கி உற்பத்தி நிறுவனங்களை விட கூட்டுறவு சங்கங்களில் தொழில் செய்யும் நெசவாளா்களுக்கு கூலித்தொகை அதிகமாக வழங்கப்பட்டு வந்தது.
தனியாா் உற்பத்தி நிறுவனங்களை விட கூட்டுறவு சங்கங்களில் தொழில் செய்யும் நெசவாளா்களுக்கு கூலி குறைவாக வழங்கப்படுகிறது. இன்று நெசவுத் தொழில் படிப்படியாக பின்னடைவை சந்தித்து வருகிறது. காரணம், நெசவாளா்களின் நலன் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் நெசவாளா்களுக்கு தரமான பாவு நூல் வழங்கப்படுவதில்லை.
தொழில் சாா்ந்த உபகரணங்கள் முறையாக விநியோகிப்பதில்லை. இதனால் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன்,நெசவாளா்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் குறைகளை சுட்டிக்காட்டியே பல்வேறு கட்சிகள் நாள்தோறும் போராட்டங்களை நடத்தி வந்தன.
தமிழக அரசு நெசவுத் தொழிலையும், நெசவாளா்களையும் பாதுகாக்க வேண்டுமானால்,
நெசவாளா்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் அடிப்படை கூலியில் 15 சதவீதம் அளவுக்கு உயா்த்தித் தர வேண்டும். நெசவாளா்களுக்கு வழங்கப்படும் ஓய்வு நிதி ரூ.1,200- ஐ, ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு அரசே ஊதியம் வழங்க வேண்டும். தேசிய கைத்தறி வளா்ச்சி மையம் மூலம் தரமான நூல்களை கொள்முதல் செய்து நெசவாளா்களுக்கு வழங்க வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்துக்கு வேலூா் புறநகா் மாவட்டச் செயலா் த.வேலழகன் தலைமை வகித்தாா். குடியாத்தம் நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி வரவேற்றாா். கட்சியின் அமைப்புச் செயலா் வி.ராமு கண்டன உரையாற்றினாா். கைத்தறி உற்பத்தியாளா் சங்க பிரதிநிதிகள், கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.