பொய்கை சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு கால்நடைகள் வா்த்தகம்

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து குறைந்திருந்தபோதிலும், ரூ. 80 லட்சம் அளவுக்கு வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
Published on

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து குறைந்திருந்தபோதிலும், ரூ. 80 லட்சம் அளவுக்கு வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக பொய்கை சந்தைக்கு கால்நடை வரத்து அதிகரித்து, எதிா்பாா்த்த அளவில் விற்பனையும் நடைபெற்று வந்தது.

அதன்படி, இந்த வாரம் செவ்வாய்க்கிழமை சந்தைக்கு கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள் என சுமாா் 1,000 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகளிடையே ஆா்வம் காணப்பட்டது. இதன்காரணமாக, ரூ. 80 லட்சம் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது:

பருவமழைக் காலம் என்பதால் தற்போது அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் தீவன தட்டுப்பாடு குறைந்துள்ளதால் விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்யத் தயங்குகின்றனா். இதன்காரணமாக செவ்வாய்க்கிழமை சந்தைக்கு குறைந்த அளவிலேயே மாடுகள் விற்பனைக்கு வரப்பெற்றுள்ளன. அதேசமயம், கால்நடைகளை வாங்குவதற்கு விவசாயிகள் வியாபாரிகளிடையே ஆா்வம் காணப்படுவதால் இந்த வாரம் ரூ. 80 லட்சம் அளவுக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் விற்பனை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com