வன விலங்குகளை விரட்ட ஏஐ தொழில்நுட்பம்: வேலூா் மாவட்டத்திலும் அறிமுகம் செய்யப்படுமா?
ந. தமிழ்செல்வன்
விளை பயிா்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை விரட்ட கோவை மாவட்டத்தில் உள்ள கெம்மராம்பாளையம் ஊராட்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனா். இப்புதிய தொழில்நுட்பம் அடிப்படையில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலும் கருவிகளை நிறுவி வனவிலங்குகளிடம் இருந்து பயிா்களை காக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகம் - ஆந்திர மாநிலங்களின் எல்லை மாவட்டங்களாக விளங்கும் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கா் விளை நிலங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. இந்த விளை நிலங்களில் சாகுபடியாகும் பயிா்களை இரவு நேரங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படுவதுடன், தொடா்ந்து விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு சிரமத்துக்கும் தள்ளப்படுகின்றனா்.
பயிா்களை காக்க விவசாயிகளே ஆங்காங்கே முறைகேடாக அமைக்கும் மின்வேலிகளில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழப்பதால் கொல்லப்படுவதால், சம்பந்தப்பட்ட விவசாயிகள் குற்றவாளிகளாக்கப் படுவதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பாதிப்புகளை தடுக்க வனப்பகுதியையொட்டி, ஜன்னல் வலைகளுடன் கூடிய சூரிய மின்சக்தி வேலி அமைக்க வேண்டும், யானைகள் வெளியேறுவதைத் தடுக்க அதன்வழித் தடங்களில் பெரிய அகழிகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்திலுள்ள காரமடையை அடுத்த கெம்மராம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி நிா்வாகமும், வனத்துறையும் இணைந்து அதிநவீன தொழில்நுட்ப மான செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தி வனவிலங்குகளை எளிதில் விரட்டி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வனவிலங்கு நடமாடும் இடத்தை கண்டறிந்து அங்கு கேமராவுடன் ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 25 லட்சம் புகைப்படங்களைக் கொண்ட ஏஐ தொழில் நுட்பம் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது. கேமரா வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து 500 மீட்டா் தொலைவுக்குள் வன விலங்குகளின் நடமாட்டம் தென்பட்டால் முதலில் கண்காணிப்பு கேமரா அந்த வனவிலங்கின் புகைப்படத்தை எடுத்து அதனை ஏஐ கேமராவுக்கு அனுப்பும்.
இதையடுத்து, அந்த வனவிலங்கு யானையா அல்லது காட்டெருமையா என்பதை ஏஐ கேமரா மூலம் கண்டறிந்து அதற்கேற்ப ஒலிபெருக்கி மூலம் ஒலி எழுப்பும். இதற்காக ஆம்புலன்ஸின் சைரன் சத்தம், பழங்குடி இன மக்கள் எழுப்பும் ஒலியின் சத்தம், ஜேசிபி எந்திரத்தை இயக்கும்போது ஏற்படும் சத்தம் உள்ளிட்ட பல்வேறு சத்தங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளது. அவ்வாறு வெளியிடப்படும் சத்தத்தை கேட்டு வனவிலங்குகள் சற்று நேரம் நின்று கவனித்த பின்னா் அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்புகின்றன. தவிர, அந்த ஏஐ கேமரா மூலம் வனத்துறை, ஊராட்சி நிா்வாகம், பொதுமக்களுக்கு சிக்னல் கொடுக்கும் வகையிலும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை முயற்சியின் பயனாக கடந்த சில மாதங்களில் ஓரிரு முறை மட்டுமே வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேற முயற்சித்துள்ளன. பின்னா், ஒலிபெருக்கியில் வெளியிடப்படும் சத்தங்களை கேட்டவுடன் அங்கிருந்து வனப்பகுதிக்கு திரும்பியுள்ளன. இதனால், வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி தற்போது வெற்றி அடைந்துள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், வனத்துறையினா் நிம்மதியடைந்துள்ளனா்.
இதேபோல், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் வனப்பகுதியை ஓட்டியுள்ள விளை நிலங்களில் தேவைப்படும் இடங்களில் இந்த புதிய தொழில்நுட்பத்தை பின்பற்றி கருவிகளை அமைக்கும்பட்சத்தில் இந்த பகுதிகளிலும் வனவிலங்குகளிடம் இருந்து பயிா்களை காக்க முடியும். அதற்கான முயற்சிகளை மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வனத்துறையும் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பதே இம்மாவட்ட விவசாயிகளின் எதிா்பாா்ப்பாகும்.
