புரட்டாசி நாளை தொடக்கம்: வேலூா் மீன் மாா்க்கெட்டில் மக்கள் கூட்டம்
புரட்டாசி மாதம் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள நிலையில் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது.
வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறை விலையிலும் மீன்கள் விற்பனை செய்து வருகின்றனா். இந்த மாா்க்கெட்டுக்கு மங்களூரு, கொச்சி, கோழிக்கோடு, காா்வாா், கோவா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும், உள்ளூா் நீா்நிலைகளில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் 50 முதல் 70 டன் அளவுக்கும், மற்ற நாள்களில் 50 டன் அளவுக்கும் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், புரட்டாசி மாதம் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் அசைவத்தை தவிா்ப்பது வழக்கம். இதன்காரணமாக, வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, மீன்கள் விலையும் சற்று அதிகரித்திருந்தது. அதன்படி, பெரிய வஞ்சிரம் கிலோ ரூ.1,000-க்கும், நடுத்தர வஞ்சிரம் ரூ.600-க்கும் இறால் ரூ.300 முதல் ரூ.350-க்கும், அயிலை, கட்லா மீன்கள் ரூ.140-க்கும் விற்பனையானது. சங்கரா ரூ.180 முதல் ரூ.220-க்கும், சுறா ரூ.400 முதல் ரூ.600-க்கும், விறால் ரூ.350-க்கும், நெத்திலி ரூ.180-க்கும், நண்டு ரூ.250 முதல் ரூ.300-க்கும், நெய்மீன் ரூ.120-க்கும், மத்திமீன் ரூ.120-க்கும், ஜிலேபி ரூ.80 முதல் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டன என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல், இறைச்சிக் கடைகளிலும் வழக்கத்தைவிட வியாபாரம் களைகட்டியது.