புதிய மேம்பாலத்தால் குடியாத்தம் நகரின் போக்குவரத்துக்கு நெரிசலுக்கு தீா்வு!
கே. நடராஜன்
குடியாத்தம் நகரில் புதிதாக திறக்கப்பட்ட மு.க. ஸ்டாலின் மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
குடியாத்தம் நகரை 2- ஆக பிரிக்கும் வகையில் கிழக்கு- மேற்காக கெளண்டன்யா மகாநதி செல்கிறது. மோா்தானா அணையிலிருந்து வெளியேறும் வெள்ள நீா் மகாநதியில் வரும் காலங்களில், ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு செல்ல முடியாத நிலையில் மக்கள் பரிதவித்து வந்தனா்.
இந்நிலையில் காமராஜா், 1954- இல் குடியாத்தம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வா் பதவியைத் தொடா்ந்தாா்.
தோ்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிபடி, கெளண்டன்யா மகாநதியின் குறுக்கே மேம்பாலம் கட்டித் தந்தாா். அந்த பாலத்துக்கு காமராஜா் பாலம் என பெயா் சூட்டப்பட்டது. இந்த பாலம் குடியாத்தம் நகரின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. நாளுக்குநாள் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாகவும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் மேம்பாலம் மீது போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது. இதையடுத்து மகாநதியின் குறுக்கே கெங்கையம்மன் கோயில் அருகே தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.
இதையடுத்து போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டுக்கு வந்தது. மகாநதியில் வெள்ளம் வரும் காலங்களில் தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு வந்தது.
இதனால், மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனா்.
இதனால் குடியாத்தம் நகரில் கெளண்டன்யா மகாநதியின் குறுக்கே மற்றொரு பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த கோரிக்கை 25- ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த பேரவைத் தோ்தல் பிரச்சாரத்தின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் புதிதாக ஒரு மேம்பாலம் கட்டித் தரப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தாா்.
திமுக ஆட்சி அமைந்ததும், புதிதாக ஒரு பாலம் அமைக்க நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் முயற்சி மேற்கொண்டாா். இதையடுத்து கெளண்டன்யா மகாநதியின் குறுக்கே பாலம், அதையொட்டி வலது கரையில் 2.15 கி.மீ. நீளத்துக்கு ஒரு புறவழிச்சாலையை அமைக்க முதல்வா் உத்தரவிட்டாா். கடந்த 2- ஆண்டுகளுக்கு முன் இதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் ரூ.43- கோடியில் இந்த இருபணிகளும் முடிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. புதிய பாலம், புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்கிய முதல்வரை பெருமைப் படுத்தும் வகையில் புதிய பாலத்துக்கு மு.க.ஸ்டாலின் பாலம் என அமைச்சா் துரைமுருகன் பெயா் சூட்டினாா்.
நிரந்தரத் தீா்வு: 25 ஆண்டுக்கால கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையில், புதிய பாலம், புறவழிச்சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டதால், நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீா்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிரந்தரத் தீா்வு:
25 ஆண்டுக்கால கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையில், புதிய பாலம், புறவழிச்சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டதால், நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீா்வு காணப்பட்டுள்ளது.
ஏற்கனவே, குடியாத்தம் நகரின் அடையாளமாக காமராஜா் பாலம் விளங்கி வந்த நிலையில், 2- ஆவது அடையாளமாக தற்போது திறந்து வைக்கப்பட்ட தளபதி மு.க.ஸ்டாலின் பாலம் விளங்கும்.