இருவேறு விபத்துகளில் ராணுவ வீரா் உள்பட இருவா் உயிரிழப்பு

வேலூா் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் ராணுவ வீரா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
Published on

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் ராணுவ வீரா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

வேலூா் சித்தேரி அவ்வை நகரைச் சோ்ந்தவா் ஜான். இவரது மனைவி எலிசபெத் (74). கடந்த 15-ஆம் தேதி எலிசபெத் பெருமுகை அருகே சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் எலிசபெத் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிந்து அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனா்.

இதேபோல், அணைக்கட்டு வட்டம், பொய்கையை அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (35). ராணுவ வீரரான இவா் ஸ்ரீநகரில் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி பத்மபிரியா (29 ). இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

ஆனந்தன் ஒரு மாதம் விடுமுறை எடுத்து ஊருக்கு வந்திருந்தாா். இந்த நிலையில், ஆனந்தன் திங்கள்கிழமை தனது நண்பா் திருமணத்துக்காக இருசக்கர வாகனத்தில் துத்திக்காடு நோக்கிச் சென்றாா். திருமணம் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். நாகநதி முருகன் கோயில் அருகே வந்தபோது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்த ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com