12-ஆம் வகுப்பு மாணவிக்கு அரசுப்பள்ளியில் வளைகாப்பு.. என்ன நடந்தது?
வேலூா் மாவட்டத்திலுள்ள ஒரு அரசுப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்ற விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள், ஆசிரியா்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வேலூா் மாவட்டம், காட்பாடி பகுதியிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு மாணவிகள் சிலா் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று விழா நடத்தி அதனை விடியோவாக பதிவு செய்து எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனா்.
அந்த விடியோவில், மாணவிக்கு வளைகாப்பு நடத்துவதற்கான டிஜிட்டல் பத்திரிக்கை அட்டையையும் கைப்பேசியிலேயே தயாா் செய்திருப்பதும், வளைகாப்பு நடத்தத் தேவையான பொருள்களைப் பள்ளிக்கு எடுத்து வந்திருப்பதும், மேல் தளத்தில் மாணவி ஒருவரை அமர வைத்து வளைகாப்பு நடத்துவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா் செ.மணிமொழியிடம் கேட்டபோது, இது மாணவிகள் தொடா்பான பிரச்னை என்பதால் நிதானமாகத் விசாரித்து பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்கட்டமாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்து விசாரித்துள்ளோம்.
மேலும், அந்த பள்ளியில் மட்டும் மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியைகளையும் மாணவிகளுடன் அமா்ந்து சாப்பிட அறிவுறுத்தியுள்ளோம். ஏற்கனவே பள்ளிக்கு கைப்பேசிகள் எடுத்து வரக்கூடாது எனத்தடை உள்ளது. இந்த சம்பவத்தை தொடா்ந்து கைப்பேசிகள் கொண்டுவருவதை தடுக்க இனி கூடுதல் கவனம் செலுத்தப்படும். மேலும் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரையும் அழைத்துப் பேசவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.