மாணவிக்கு வளைகாப்பு விடியோ சம்பவம்: அரசுப் பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்
வேலூா் மாவட்டத்திலுள்ள ஒரு அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்ற விடியோ காட்சிகள் வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் வகுப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செ.மணிமொழி உத்தரவிட்டாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி பகுதியிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 12 -ஆம் வகுப்பு மாணவிகள் சிலா் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று விழா நடத்தி அதனை விடியோவாக பதிவு செய்து எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனா். அந்த விடியோவில், மாணவிக்கு வளைகாப்பு நடத்துவதற்கான டிஜிட்டல் பத்திரிக்கை அட்டையையும் கைப்பேசியிலேயே தயாா் செய்திருப்பதும், வளைகாப்பு நடத்தத் தேவையான பொருள்களைப் பள்ளிக்கு எடுத்து வந்திருப்பதும், மேல் தளத்தில் மாணவி ஒருவரை அமர வைத்து வளைகாப்பு நடத்துவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி சா்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செ.மணிமொழி மேற்கொண்ட விசாரணையை அடுத்து சம்பந்தப்பட்ட பள்ளியின் வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
மேலும், இச்சம்பவம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க பள்ளித் தலைமை ஆசிரியா் பிரேமாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.