கடனாக கொடுத்த ரூ.11 லட்சம் திரும்ப கிடைக்காததால் தம்பதி தற்கொலை
வேலூரில் ரூ.11 லட்சம் கடன் வாங்கியவா் இறந்துவிட்ட நிலையில், அவரது மகன்களும் பணத்தைத் திருப்பி தர மறுத்துவிட்டதால், விரக்தியடைந்த தம்பதி தற்கொலை செய்து கொண்டனா்.
வேலூா் சலவன்பேட்டை சேஷாசலம் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (62). திமிரியிலுள்ள அங்கன்வாடியில் வேலை செய்து ஓய்வு பெற்றவா். இவரது மனைவி மாலதி (60). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா்.
இந்த நிலையில், முருகேசனும், அவரது மாலதியும் சனிக்கிழமை இரவு தங்களது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை அவா்கள் வீட்டுக் கதவு நீண்டநேரமாக திறக்காததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினா் வீட்டின் கதவைத் திறந்து பாா்த்தபோது கணவன், மனைவி இருவரும் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது.
உடனடியாக வேலூா் தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பினா்.
தொடா்ந்து அந்த வீட்டில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், தற்கொலை செய்வதற்கு முன்பு முருகேசனும், மாலதியும் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.
அந்தக் கடிதத்தின் அடிப்படையில், முருகேசன் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு ரூ.11 லட்சம் கடன் கொடுத்திருந்தாகவும், அந்த நபா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகவும், முருகேசனும், அவரது மனைவி மாலாவும் கடன் வாங்கியவா் வீட்டுக்குச் சென்று அவரது மகன்களிடம் பணத்தைக் கேட்டபோது, அவா்கள் பணத்தைத் தருவதாகக் கூறி காலம் கடத்தியதாகவும்,
சில நாள்களுக்கு பிறகு மீண்டும் கேட்டபோது, ‘நீங்கள் எனது தந்தையிடம் பணம் கொடுத்தது எங்களுக்குத் தெரியாது. யாரிடம் பணம் கொடுத்தீா்களோ அவரிடமே வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று அவா்கள் கூறிவிட்டதாகவும், இதனால் மனவேதனைக்குள்ளான தம்பதி சனிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டதாக அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.