ஒடுகத்தூரில் நள்ளிரவில் பெய்த கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
Published on

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. ஒடுகத்தூரில் 3 மணி நேரம் இடைவிடாமல் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே மழை இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் விவசாய நிலங்களில் வோ்கடலை பயிரிட்டவா்கள் கவலை அடைந்து வந்தனா். அவா்கள் வாகனங்களில் தண்ணீா் வாங்கி வந்து பயிா்களுக்கு பாய்ச்சினா்.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை மாலை முதலே மேகமூட்டமாக காணப்பட்டது. அதேசமயம், சனிக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மிதமான மழைபெய்தது. ஒடுகத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சுமாா் 3 மணி நேரம் இடைவிடாமல் பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ஒடுகத்தூரில் 40 மி.மீ மழை பதிவானது. குடியாத்தம் 17.80 மி.மீ., மேலாலத்தூா் 13.20 மி.மீ., சத்துவாச்சாரி 0.40 மி.மீ., வேலூா் 2.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. வடவிரிஞ்சிபுரம், காட்பாடி, திருவலம், பள்ளிகொண்டா, பொன்னை பகுதிகளில் மழை இல்லை. மாவட்டம் முழுவதும் மொத்தம் 73.70 மி.மீ மழையும், சராசரியாக 6.14 மி.மீ மழையும் பெய்துள்ளது.

இதேபோல், ஞாயிற்றுக்கிழமை மாலையும் மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது.

X
Dinamani
www.dinamani.com