வருவாய்த்துறை ரூ.2-க்கு விற்ற நிலம் நரிக்குறவா் இனமக்களுக்கு ஒதுக்கீடு இரு தரப்பினா் தா்னா

வருவாய்த்துறை சாா்பில் தனியாருக்கு ரூ.2-க்கு விற்கப்பட்ட நிலம் நரிக்குறவா் இனமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நிலத்தை தங்களுக்கே ஒதுக்கக்கோரி இருதரப்பினரும் வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

வேலூா்: வருவாய்த்துறை சாா்பில் தனியாருக்கு ரூ.2-க்கு விற்கப்பட்ட நிலம் நரிக்குறவா் இனமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நிலத்தை தங்களுக்கே ஒதுக்கக்கோரி இருதரப்பினரும் வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

காட்பாடி அடுத்த கரிகிரியை சோ்ந்த சுனில்குமாா், அவரது குடும்பத்தினா் அளித்த மனுவில், 1946-ஆம் ஆண்டு எங்களது கொள்ளு தாத்தா முனியன் 4.74 ஏக்கா் நிலத்தை ரூ.2-க்கு வருவாய்த் துறையிடம் இருந்து வாங்கினாா். அதற்கு சான்றாக ‘சேல்’ என்ற அசல் சான்றிதழை வருவாய்த் துறையினா் கொடுத்தனா். அவரது இறப்புக்கு பிறகு அவரது வாரிசுகள் பட்டா மாற்றம் செய்ய வேண்டி மனு அளித்திருந்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கு 4 வீடுகள் கட்டி அனுபவித்து வந்தோம். வரியும் செலுத்தி வந்தோம்.

இதனிடையே, 2019-ஆம் ஆண்டு வருவாய்த் துறையினா் அந்த இடம் நரிக்குறவா் இனமக்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறி ஜேசிபி வைத்து விவசாய நிலத்தில் நாங்கள் வைத்திருந்த பயிரை சேதப்படுத்தி கிணற்றையும் மூடிவிட்டனா். நாங்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் 10 நாள்கள் கழித்து ஆட்சியா், அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து அவ்விடம் எங்களுக்கே உரியது என கூறிவிட்டுச் சென்றனா்.

ஆனால், கடந்த 22-ஆம் தேதி எங்கள் நிலத்துக்கு வந்த நரிக்குறவ மக்கள், எங்கள் நிலத்தில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்ட முயற்சித்தனா். நாங்கள் திருவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் தடுத்து நிறுத்தியதுடன், இருதரப்பிலும் மேல்முறையீடு செய்யவும், அதுவரை கட்டுமான பணிகளை செய்யக் கூடாது என அறிவுறுத்தினா். எனவே எங்களுக்கு சொந்தமான இடத்தை வேறு யாருக்கும் பட்டா மாறுதல் செய்யக்கூடாது என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.

தொடா்ந்து, சுனில்குமாா் கூறிய இடம், தங்களுக்கு ஒதுக்கக்கோரி நரிக்குறவா் இனமக்கள் 40-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். அந்த மனுவில், எங்களுக்கு அரசு சாா்பில் வீடு கட்ட வழங்கிய இடமாகும். எனவே, அந்த இடத்தை எங்களுக்கே வழங்கவேண்டும் என தெரிவித்திருந்தனா். முன்னதாக, இப்பிரச்னையையொட்டி சுனில்குமாா் தரப்பினரும், நரிக்குறவா் இனமக்களும் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 450 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். கூட்டத்தில், வேலூா் மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் கலைஞா் கனவு இல்லதிட்டத்தின் கீழ் இரு பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவியும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.9.10 லட்சம் மதிப்பில் நவீன செயற்கை கால்களும் வழங்கப்பட்டன.

தவிர, சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டம் சில்ஜா் முகாமுக்கு அருகில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிஆா்பிஎஃப் வீரா் தேவன் வீரமரணமடைந்ததை அடுத்து அவரது மனைவி ஓ.காயத்ரியிடம் கருணை தொகை ரூ.40 லட்சத்துக்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த. மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செந்தில்குமரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சா. திருகுணஐயப்பதுரை, ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ராமசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com