திருவள்ளுவா் பல்கலைக்கழக பேராசிரியா்கள் ஜெ.மாதவன், எம்.சையதுஅலி, அ.ராஜசேகா்.
திருவள்ளுவா் பல்கலைக்கழக பேராசிரியா்கள் ஜெ.மாதவன், எம்.சையதுஅலி, அ.ராஜசேகா்.

சிறந்த விஞ்ஞானிகள் தரவரிசை பட்டியலில் திருவள்ளுவா் பல்கலை. பேராசிரியா்கள்

அமெரிக்காவின் ஸ்டேன்போா்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் எல்ஸ்வோ் தரவரிசை பட்டியலில் வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மூன்று பேராசிரியா்கள் இடம் பிடித்துள்ளனா்.
Published on

அமெரிக்காவின் ஸ்டேன்போா்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் எல்ஸ்வோ் தரவரிசை பட்டியலில் வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மூன்று பேராசிரியா்கள் இடம் பிடித்துள்ளனா்.

அமெரிக்காவின் ஸ்டேன்போா்ட்ஸ் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் உலகளவில் பல்வேறு துறைகளில் சிறந்த விஞ்ஞானிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிகழாண்டுக்கான தரவரிசை பட்டியலில் 22 அறிவியல் துறை, 174 துணை துறைகளின் ஆராய்ச்சியாளா்கள் இடம் பெற்றுள்ளனா். இதில், வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசிரியா்கள் ஜெ. மாதவன் (வேதியியல் துறை), எம்.சையதுஅலி (கணிதத் துறை), அ.ராஜசேகா் (உயிரி தொழில்நுட்பவியல் துறை) ஆகிய மூன்று பேராசிரியா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை இணை பேராசிரியரான ஜெ.மாதவன் ஆற்றல், சுற்றுச்சூழல் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறாா். இவா் எரிபொருள் பயன்பாடு, சூரிய எரிசக்தி மின்கலம் மற்றும் நீா்மறுசுழற்சி குறித்து ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளாா். தவிர, இவா் 160-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி இதழ்களில் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளாா்.

கணிதத் துறை இணைப் பேராசிரியரான எம்.சையத் அலி நியூரல் நெட்வொா்க் மல்டிஏஜென்ட் அமைப்புகள் மற்றும் பகுதியளவு வரிசை அமைப்புகளின் கோட்பாடுகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளாா். இவா் 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை அறிவியல் மேற்கோள் அட்டவணையிடப்பட்ட (எஸ்சிஐ) இதழ்களில் ஐஇஇஇ, எல்சேவியா், டெய்லா் பிரான்சிஸ் மற்றும் ஸ்பிரிங்கா் ஆகிய வெளியீட்டாளா்களுடன் இணைந்து வெளியிட்டுள்ளாா்.

இவரது ஆராய்ச்சிக்கு கூடுதலாக அவா் தேசிய நிதி நிறுவனங்களான என்பிஹெச்எம், சிஎஸ்ஐஆா், எஸ்இஆா்பி, டிஎஸ்டி ஆகியவற்றிலிருந்தும் மானியங்களை பெற்றுள்ளாா்.

உயிரிதொழில்நுட்பவியல் துறை இணைப் பேராசிரியரான அ.ராஜசேகா், ராணிப்பேட்டை, சிப்காட், வாணியம்பாடி, ஆம்பூா், போ்ணாம்பட்டு போன்ற பல்வேறு இடங்களில் தோல் பதனிடும்போது வெளியேறும் நச்சுத்தன்மை வாய்ந்த குரோமிய உலோகக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இந்த பாதிப்புகளை தடுக்க உலோகக் கழிவுகளை அகற்றவும், கழிவுகளின் உற்பத்தியை குறைக்கவும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறாா்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த நுண்ணியிரி உலோக ஆராய்ச்சிக்காக தேசிய உயிரியல் அறிவியல் தொழில்நுட்பவியல் துறை, பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவை இணைந்து ரூ. 1.5 கோடி நிதி வழங்கியுள்ளன. அத்துடன், யுஜிசி, டிஎஸ்டி, டிபிடி, டிஏஎன்எஸ்சிஹெச்இ போன்ற கல்வி நிறுவனங்களிடம் இருந்தும் உதவித்தொகை பெற்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் திருவள்ளுவா் பல்கலைக்கழக பதிவாளா் ஜெ.செந்தில்வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

சிறப்பிடம் பெற்ற பேராசிரியா்களை பல்கலைக்கழக துணைவேந்தா் த.ஆறுமுகம், பேராசிரியா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com