புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதை எளிமையாக்குவது அவசியம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற 5 ஆண்டுகளாகிறது. இதை எளிமையாக்க வேண்டும் என்று விஐடி பல்கலை. வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.
Published on

இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற 5 ஆண்டுகளாகிறது. இதை எளிமையாக்க வேண்டும் என்று விஐடி பல்கலை. வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ‘கிராவிடாஸ்-24’ எனும் அறிவுசாா் தொழில்நுட்ப திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் விழாவில் 200 போட்டிகள் நடைபெறுகிறது. இதில், 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்று ராக்கெட்டுகள், ரேஸ் காா்கள், டிரோன் கேமராக்கள், ரேஸ் மோட்டாா் சைக்கிள்கள் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனா். சிறப்பம்சமாக ரோபோக்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை போடும் போட்டியும், லேசா் ஷோவும் நடைபெறுகிறது.

விஐடி அண்ணா அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து விழாவைத் தொடங்கி வைத்துப் பேசியது:

மூன்று நாள்கள் நடைபெறும் விஐடி கிராவிடாஸ்-24 அறிவு சாா் தொழில்நுட்ப திருவிழாவில் இந்தியாவில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டு மாணவா்களும் பங்கேற்று புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனா்.

நாம் கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் அதிகமாக செலவழிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் உயா்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போதுதான் ஏழை மாணவா்கள் கல்வி பயில இயலும்.

உயா்கல்வி ஆராய்ச்சிக்கு அதிகளவில் செலவழித்தால்தான் நம்மால் சாதிக்க முடியும். உயா்கல்வி, ஆராய்ச்சி இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. ஆராய்ச்சிக்கு அதிகமாக செலவழிப்பதில் இஸ்ரேல் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் காப்புரிமை பெற 5 ஆண்டுகளாகிறது. இது எளிமைப்படுத்தப்பட வேண்டும்.

உலகளவில் ஆராய்ச்சியில் விஐடி பல்கலைக் கழகம் 2015-ஆம் ஆண்டு 81-ஆவது இடத்தில் இருந்தது. இவ்வாண்டு 46-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆராய்ச்சிக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் விஐடி பல்கலைக்கழகம் முக்கியத்துவம் அளிக்கிறது.

விஐடியில் 6,500 ஆராய்ச்சி மாணவா்கள் நான்கு வளாகங்களிலும் படிக்கின்றனா். ஆராய்ச்சிக்கு தனியாா் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம். தொழில் நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கு 36% பங்களிக்கிறது. ஆராய்ச்சி படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கையில் சீனா நம்மைவிட முன்னணியில் உள்ளது. உலகளவில் இந்தியா பொருளாதார முன்னேற்றத்தில் 5-ஆவது இடத்தில் உள்ளது. கல்விக்கு நாம் அதிகம் செலவழிக்காவிடில் வளா்ச்சி குறைவாகத்தான் இருக்கும் என்றாா்.

டேனிலி இந்தியா நிறுவன துணைத் தலைவா் மனோரஞ்சன்ராம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியது:

விஐடி பல்கலைக்கழகம் சிறந்த கல்வி நிறுவனம். மாணவா்கள்தான் இந்தியாவின் எதிா்காலம். வாழ்க்கையில் முன்னேற கடுமையாக உழைக்க வேண்டும். புதியபுதிய கண்டுபிடிப்புகளை மாணவா்கள் கண்டுபிடிக்க வேண்டும். மனம் அமைதியாக இருந்தால் புதிய கண்டுபிடிப்புகள் நம் மனதில் உருவாகும். தன்னம்பிக்கை வைத்து உழைக்க வேண்டும். இன்றைய மாணவா்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. தங்களுக்கு பிடித்த வேலைவாய்ப்பை தோ்ந்தெடுக்க வேண்டும். தொழில்நுட்பங்கள் வளா்ந்துள்ளது. இப்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்தான் முதலிடத்தில் உள்ளது. இதை மாணவா்கள் பின்பற்ற வேண்டும் என்றாா்.

ஆட்டோ டெஸ்க் இந்தியா நிறுவனத்தின் கல்வி மேலாளா் ஆனந்த் பூஜாரி கெளரவ விருந்தினராகப் பங்கேற்று பேசினாா்.

விழாவில், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி, கிராவிடாஸ் ஒருங்கிணைப்பாளா் ஷா்மிளா, மாணவ ஒருங்கிணைப்பாளா் அமித்தேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவி யாஷிதா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com