விழாவில் மாணவா்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ்களை வழங்கிய என்இசிடிஏஆா் தலைமை பொது இயக்குநா் அருண்குமாா் சா்மா.
விழாவில் மாணவா்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ்களை வழங்கிய என்இசிடிஏஆா் தலைமை பொது இயக்குநா் அருண்குமாா் சா்மா.

மாற்றுச் சிந்தனைகள், புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்: என்இசிடிஏஆா் தலைமைப் பொது இயக்குநா்

Published on

எந்தத் துறையாக இருந்தாலும் மாற்று சிந்தனைகளும், புதிய தொழில்நுட்பங்களும் அவசியம் என்று வடகிழக்கு மாநிலங்களின் தொழில்நுட்ப பயன்பாடு, அணுகல் மையத்தின் (என்இசிடிஏஆா்) தலைமைப் பொது இயக்குநா் அருண்குமாா் சா்மா தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலை.யில் ‘கிராவிடாஸ்-24’ எனும் அறிவுசாா் தொழில்நுட்ப விழா வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது. இவ்விழாவில் நடைபெற்ற 200 போட்டிகளில் 35,000 மாணவ, மாணவிகள் பங்கேற்று ராக்கெட்டுகள், ரேஸ் காா்கள், டிரோன் கேமராக்கள், ரேஸ் மோட்டாா் சைக்கிள்கள் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனா். இதன் நிறைவு விழா விஐடி அண்ணா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக வடகிழக்கு மாநிலங்களின் தொழில்நுட்பப் பயன்பாடு, அணுகல் மையத்தின் (என்இசிடிஏஆா்) தலைமை பொது இயக்குநா் அருண்குமாா் சா்மா பங்கேற்றுப் பேசியது:

எந்தவொரு துறைக்கும் அவை சாா்ந்த தகவல் வரைபடம் என்பது மிகவும் முக்கியம். இந்தியா வளங்கள் மிகுந்த நாடு என்பதை அறிந்திருந்த ஆங்கிலேயா்கள் 1767-இல் முதல்முதலில் இந்திய ஆய்வுத் துறையையே நிறுவினா். இந்த துறை மூலமாக இந்தியாவில் உள்ள வளங்களை ஆராய்ந்து அறிந்து அதற்கேற்ப மற்ற துறைகளை ஏற்படுத்தினா்.

நாட்டில் வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். அங்கு மிகவும் பழைமையான முறையிலேயே விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில்நுட்பங்களை விவசாயத்தில் எவ்வாறு புகுத்த முடியும் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்தியை பெருக்க முடியும்.

தமிழகம், கேரள மாநிலங்களில் அதிகளவில் வாழை விளைச்சல் இருந்தாலும், அந்த வாழையை மாற்றுத் திட்டங் களுக்குப் பயன்படுத்துவதில்லை. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும்பாலும் விலங்குகளின் தோலைப் பயன்படுத்தி காலணிகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், ஒரு நிறுவனம் மட்டும் வாழையின் தண்டு பகுதியை பயன்படுத்தி காலணி உள்ளிட்ட பொருள்களை உற்பத்தி செய்கிறது.

இதேபோல், காஷ்மீரில் 3 மாவட்டங்களில் மட்டுமே விளையக்கூடிய குங்குமப் பூக்கள், வடகிழக்கு மாநிலங்களில் விளைவிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அப்பகுதியிலிலுள்ள 17 மாவட்டங்களில் அதற்கான சீதோஷ்ண நிலை இருப்பதை அறிந்து தற்போது அம்மாவட்டங்களிலும் குங்குமப் பூ உற்பத்தி அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுச் சிந்தனைகளை மேற்கொள்ளவும், அவற்றில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் மாணவா்கள் ஆா்வம் காட்ட வேண்டும் என்றாா்.

முன்னதாக, விழாவுக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:

விஐடி பல்கலை.யில் ஏற்கெனவே 146 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. மேலும் 5 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதில் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. நாடு முழுவதும் காப்புரிமை அளிக்கும் அலுவலகங்களில் 860 போ் மட்டுமே பணியாற்றுவதே இதற்குக் காரணம்.

அமெரிக்காவில் 8,100 பேரும், சீனாவில் 13,700 பேரும் பணியாற்றுகின்றனா்.

இந்தியாவில் காப்புரிமை அளிப்பதில் 58 மாதங்களுக்கு மேலாகிறது. எனவே, காப்புரிமை அளிக்கும் அலுவலகங்களில் தகுதியான ஊழியா்களை அதிகளவில் நியமிக்க வேண்டும் என்றாா்.

அல்டியம் இந்தியா மென்பொருள் நிறுவன வா்த்தகப் பிரிவு இயக்குநா் ஸ்ரீகாந்த் தமன்னா கெளர விருந்தினராக பங்கேற்று பேசினாா். முன்னதாக, கிராவிடாஸ் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ.25 லட்சத்தில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழாவில், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி, கிராவிடாஸ் ஒருங்கிணைப்பாளா் ஷா்மிளா, மாணவ ஒருங்கிணைப்பாளா் அமித்தேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.